விசேட சோதனையில் சிக்கிய வியாபார நிலையங்களுக்கு தண்டப்பணம் விதிப்பு.!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பருத்தித்துறை நகரில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது, கடுமையான சுகாதார சீர்கேடுகளுடன் உணவுப் பொருட்களை விற்பனை செய்த 12 வியாபார நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக மொத்தம் ஒரு இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் தீபாவளிப் பெருநாளை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் பொதுச் சுகாதார பிரிவினரால் இந்த விசேட திடீர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தச் சுற்றிவளைப்பின்போது கடைகளில் காலாவதித் திகதி முடிவடைந்த உணவுப் பொருட்களை விற்பனைக்காக வெளிக்காட்டியமை, வண்டுகள் மொய்த்த நிலையிலும் மனித நுகர்வுக்கு ஏற்றதல்லாத பழுதடைந்த நிலையில் மரக்கறி எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்கள் காணப்பட்டமை, முறையான அனுமதிகள் மற்றும் சுகாதாரச் சான்றிதழ்கள் இன்றி உணவுப் பொருட்களை விற்பனைக்குப் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை, கழிவுநீரைத் திறந்த வெளியில் வெளியேற்றியமை மற்றும் வெற்றிலை மென்ற வண்ணம் சுகாதாரமற்ற முறையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டமை, தூசிகள் படிந்த சுகாதாரமற்ற இடங்களில் கோழி இறைச்சியை வெட்டி விற்பனை செய்தமை ஆகிய சுகாதார சீர்கேடுகள் அடையாளம் காணப்பட்டிருந்தன.
இதனையடுத்து, மேற்படி 12 வியாபார நிலையங்களின் உரிமையாளர்களுக்கும் எதிராக நேற்று வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர் ப.தினேஷினால் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கானது பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி இந்துஜா சிவலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளைச் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொண்டதை அடுத்து, நீதிபதி அவர்களுக்கு மொத்தம் ஒரு இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
பண்டிகைக் காலங்களில் மக்களின் உடல்நலனைப் பாதிக்கும் இத்தகைய சட்டவிரோத செயல்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை தொடரும் என்று சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.




