லாஃப்ஸ் எரிவாயு விலை உயர்வு; நாடாளுமன்றத்தில் கடும் அமளி.!
லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையை நேற்று நள்ளிரவு முதல் திடீரெனப் பெருமளவில் அதிகரித்தமை தொடர்பில், இன்று சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் சபாநாயகர் மற்றும் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சபையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
ஜனாதிபதி சபைக்கு வருகை தந்து வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் மற்றும் அரசின் கொள்கை விளக்கம் குறித்த விடயங்களை முன்வைத்த பின்னர், நேற்று நள்ளிரவு லாஃப்ஸ் எரிவாயுவின் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார்.
லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பால் நாட்டு மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, நிலையியற் கட்டளை 27(2)-இன் கீழ் பட்டியலிடப்பட்ட கேள்வியை மாத்திரம் முன்வைக்குமாறு சபாநாயகர் அறிவுறுத்தியதுடன், சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவும் அவரது பேச்சுக்குத் தடை ஏற்படுத்தினர்.
இந்தச் சந்தர்ப்பத்தில், லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விகளை நாடாளுமன்ற ஹன்சார்ட் அறிக்கையிலிருந்து நீக்குமாறு சபை முதல்வர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்படாமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தமது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
நாடும் நாட்டு மக்களும் நேரடியாக எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்படாமை மிகவும் கவலைக்குரிய விடயம் என்றும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.


