சுகாதார சீர்கேட்டுடன் உணவுப் பொருட்கள் விற்பனை; வர்த்தகர்களுக்கு தண்டப்பணம் விதிப்பு.!
வல்வெட்டித்துறைப் பகுதியில் சுகாதார சீர்கேடான முறையில் உணவுப் பொருட்களை விற்பனைக்காகக் களஞ்சியப்படுத்திய மற்றும் விற்பனை செய்த மூன்று வியாபார நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக மொத்தம் 70 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீபாவளிப் பெருநாளை முன்னிட்டு வர்த்தக நிலையங்கள் பொதுச் சுகாதார பிரிவினரால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே இந்தச் சட்டவிரோத செயல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்தச் சிறப்பு சுற்றிவளைப்பின்போது மேற்படி கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனையின் பொருட்டு வெளிக்காட்டியமை, முறையான அனுமதிகள் மற்றும் சுகாதாரச் சான்றிதழ்கள் இன்றி உணவுப் பொருட்களை விற்பனைக்குக் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை, ஈக்கள் மற்றும் நுளம்புகள் பெருகக்கூடிய சூழலை ஏற்படுத்தும் வகையில் கழிவுநீரைத் திறந்த வெளியில் வெளியேற்றியமை ஆகிய பாரிய சுகாதார சீர்கேடுகள் உறுதிப்படுத்தப்பட்டன.
இதனையடுத்து, மேற்படி மூன்று வியாபார நிலையங்களின் உரிமையாளர்களுக்கும் எதிராக வல்வெட்டித்துறை நகர சபையின் பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஷினால் நேற்று வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கானது பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி இந்துஜா சிவலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சந்தேகநபர்கள் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஏற்றுக்கொண்டதை அடுத்து, மூவருக்கும் எதிராக மொத்தம் 70 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இத்தகைய திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.




