வரலாற்றைத் திரித்ததாகக் குற்றச்சாட்டு : சோனியாவின் நூலை எரித்து எதிர்ப்பு!
1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக சோனியா காந்தி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ள கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவரது நூலை சீக்கிய அமைப்பினர் தீயிட்டு எரித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி எழுதியுள்ள ‘Belonging: A Journey of Love’ என்ற சுயசரிதை நூலில், 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக இடம்பெற்ற கலவரங்கள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
1984ஆம் ஆண்டு ஜூன் மாதம், பஞ்சாபில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவின் பேரில் ‘ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்’ இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சீக்கிய மதத் தலைவர் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, 1984 ஒக்டோபர் 31ஆம் திகதி இந்திரா காந்தி தனது சீக்கிய மெய்க்காப்பாளர்களின் துப்பாக்கி பிரயோகத்தால் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராகப் பல்வேறு பகுதிகளில் வன்முறைத் தாக்குதல்கள் இடம்பெற்றன. இதில் 2,733 சீக்கியர்கள் உயிரிழந்ததாக 1987ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அஹுஜா குழு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தனது சுயசரிதை நூலில் அந்த காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து சோனியா காந்தி தெரிவித்துள்ள கருத்துகள் தவறானவை எனக் குற்றம்சாட்டியுள்ள பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும், டில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு உறுப்பினர்களும் நூலின் பிரதியொன்றை டெல்லியில் தீயிட்டு எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறித்த நூலில் வரலாற்றுச் சம்பவங்கள் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.


