‘ஹாட்லியின் மைந்தர்கள்’ நினைவேந்தல் இரத்ததான முகாமில் பங்கேற்க அழைப்பு
யாழ். குடாநாட்டிலுள்ள சகல இரத்த வங்கிகளிலும் தற்போது நிலவி வரும் கடும் குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு, ‘ஹாட்லியின் மைந்தர்கள்’ நினைவு இரத்ததான முகாமில் பங்கேற்றுக் குருதிக்கொடை வழங்குமாறு தன்னார்வக் குருதிக் கொடையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கல்விச் செயற்பாட்டின் நிமித்தம் வடமராட்சி – இன்பர்சிட்டி கடற்பகுதியில் கடந்த 1999ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் திகதி கடல்வள ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த வேளை, எதிர்பாராத விதமாகக் கடல் அலையில் சிக்குண்டு உயிரிழந்த ஹாட்லிக் கல்லூரியின் 2000ஆம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்களான பூரணமூர்த்தி கந்தர்வன், சிவநாதன் இரவிசங்கர், சுந்தரலிங்கம் சிவோத்தமன் மற்றும் பாலகிருஷ்ணன் பிரதீபன் ஆகிய நால்வரின் 27ஆவது ஆண்டு நினைவையும், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவனாகக் கல்வி கற்று வந்த வேளை புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்த மரியரட்ணம் குணரட்ணம் அவர்களின் 22ஆவது ஆண்டு நினைவையும் முன்னிட்டு இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மற்றும் ‘ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு நிதியம்’ ஆகியன இணைந்து நடத்தும் இந்த இரத்ததான முகாம், எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
தற்போதைய அவசர குருதித் தட்டுப்பாட்டு நிலையைக் கருத்திற்கொண்டு, வடமராட்சி வாழ் தன்னார்வக் குருதிக் கொடையாளர்கள் அனைவரும் இந்த முகாமில் தவறாது கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலதிக விவரங்கள் மற்றும் தொடர்புகளுக்கு 077 312 2198 அல்லது 076 070 0254 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியும்.


