7 வீத பொருளாதார வளர்ச்சி இலக்குடன் நாடாளுமன்றில் பாதீடு சமர்ப்பிப்பு
2027ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார்.
‘பொருளாதாரப் பரிமாற்றம் – நிலையான அபிவிருத்தி’ என்பதைப் பிரதான இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இப் பாதீட்டில், 7 சதவீத நிலையான வருடாந்தப் பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கும், மூலதனச் செலவினங்களுக்காக 2,000 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்ட உரையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளின் முழு விபரம் வருமாறு:-
பொருளாதாரக் கொள்கை மற்றும் சர்வதேச நாணய நிதியம்:
- நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை முழுமையாகப் பாதுகாத்துள்ளதாகவும், ஒவ்வொரு ரூபாவுக்கும் மக்களுக்குப் பொறுப்புக்கூறுவதே தமது இலக்கு எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
- நாட்டின் பணவீக்கம் 8.3 சதவீதமாகப் பதிவாகியுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து கடன் நிலைத்தன்மையை ஏற்படுத்துவது அவசியமாகும். இதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பது குறித்து ஆராய விசேட குழுவொன்று அமைக்கப்படவுள்ளது.
- 528 பில்லியன் ரூபா இழப்பைச் சந்தித்துள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சுமையைத் தொடர்ந்து அரசாங்கத்தினால் தாங்க முடியுமா என்பது குறித்துத் திறைசேரி மீளாய்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
சமூகப் பாதுகாப்பு மற்றும் கொடுப்பனவு அதிகரிப்பு:
- அஸ்வெசும: அஸ்வெசும உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புக் கொடுப்பனவுகளுக்காக 230 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளிகள்: இவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்தக் கொடுப்பனவு 10,000 ரூபாவிலிருந்து 12,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கல்வித் துறை மற்றும் மாணவர் நலன்:
- ஆசிரியர் கொடுப்பனவுகள்: கல்வியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு 10,500 ரூபாவிலிருந்து 20,000 ரூபாவாகவும், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களின் கொடுப்பனவு 12,500 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
- மாணவர் சலுகைகள்: தெரிவுசெய்யப்பட்ட 7 இலட்சத்து 50 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்குப் பிராட்பேண்ட் வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன், தனியார் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரச வங்கிகள் ஊடான வட்டியற்ற கடனுதவி தொடர்ச்சியாக வழங்கப்படுவதுடன், அவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- கல்விச் சீர்திருத்தம்: 2ஆம் மற்றும் 6ஆம் தரங்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
வடக்கு மாகாணம் மற்றும் பிராந்திய அபிவிருத்தி:
- வடக்கு கடற்றொழில் மற்றும் வீதி அபிவிருத்தி: வடக்கு மாகாண கடற்றொழில் அபிவிருத்திக்கு 5,000 மில்லியன் ரூபாவும், வடக்கிலுள்ள உப்பளங்களை அண்மித்த அணுகு வீதிகளை அமைப்பதற்கு 236 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- யாழ்ப்பாணம் நீர்ப் பாதுகாப்பு: யாழ்ப்பாணக் குடாநாட்டில் நீர்ப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 75 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
- நன்னீர் மீன்பிடி மற்றும் இழப்பீடு: நன்னீர் மீன்பிடித்தொழிலை ஊக்குவிக்க 6,200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மீன்பிடித் தொழிலில் ஏற்படும் திடீர் உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகை 2 மில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
- வீதி மற்றும் பெருந்தோட்ட அபிவிருத்தி: நாடளாவிய வீதிகள் அபிவிருத்திக்காக 487 பில்லியன் ரூபாவும், பெருந்தோட்டத் துறையின் அபிவிருத்திக்காக 13,000 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் தொலைத்தொடர்பு:
- சீரான மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக 26.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சியிலிருந்து ஹபரணை வரை புதிய மின் பரிமாற்ற அமைப்பு உருவாக்கப்படவுள்ளது.
- நுரைச்சோலை மின் நிலையத்தில் அவசர காலங்களில் மேலதிக மின்சாரத்தை வழங்குவதற்காக 30 மெகாவாட் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.
- சூரிய மின் உற்பத்தி செய்வோருக்கு மின்கலன் அமைப்புக்காக 25,000 ரூபா நிவாரணமும், மாதாந்தம் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் 3 இலட்சம் நுகர்வோருக்கு இலவசமாக ‘ஸ்மார்ட்’ மின்மானிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- கையடக்கத் தொலைபேசி இணைப்புகளின் தொடர்பாடல் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு நவீன தானியங்கி முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


