பருத்தித்துறை நகர சபை விவகாரம்; குற்றச்சாட்டுகளில் இருந்து தவிசாளர் விடுவிப்பு.!
பருத்தித்துறை நகர சபை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட சுயாதீன விசாரணையின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், பல்வேறு நிர்வாக, ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகளை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முன்னெடுத்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, நகர சபையின் தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை விடுவிப்பதற்கும், முன்னாள் செயலாளர் திருமதி தாரணி கஜரூபன் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் தொடர்பில் ஆரம்பகட்டப் புலனாய்வுகளை மேற்கொள்வதற்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த நகர சபை உறுப்பினர் சி.பொன்னம்பலத்தின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், நகர சபையின் புதிய சந்தைக் கட்டடத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள குறைபாடுகளைச் சீர்செய்வதற்காக நிபுணத்துவக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகர சபை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக, 2026 மார்ச் 12ஆம் திகதியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஒருவரைத் தனிநபர் விசாரணைக் குழுவாக ஆளுநர் நியமித்திருந்தார்.
குறித்த விசாரணைகள் நிறைவடைந்து அதன் அறிக்கை ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை ஆராய்ந்ததன் அடிப்படையிலேயே தற்போதைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தவிசாளர் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பு
விசாரணை அறிக்கையின் அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், பருத்தித்துறை நகர சபையின் தவிசாளர் மீது சுமத்தப்பட்டிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுவித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை, எதிர்காலத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அமைவாக, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்காமல், நடுநிலையுடனும் பொறுப்புடனும் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் எனத் தவிசாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் செயலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் தொடர்பில் ஆரம்பப் புலனாய்வு
விசாரணை அறிக்கையில், நகர சபையின் முன்னாள் செயலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆகியோரின் சில செயற்பாடுகள் நகர சபையின் சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக அமையவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், தமது பதவிகளைப் பயன்படுத்தி நிர்வாகச் சீர்கேடுகளுக்கு வழிவகுத்தமை மற்றும் உயர் அதிகாரிகளுக்குத் தவறான வழிகாட்டல்களை வழங்கியமை தொடர்பான அவதானிப்புகளும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளரிடம் தொடர்ச்சியாக முறைப்பாடுகளை முன்வைத்து, தற்போதைய நகர சபையின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளையும் அழுத்தங்களையும் ஏற்படுத்த முயற்சித்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், முன்னாள் செயலாளரின் செயற்பாடுகள் தொடர்பில் ஆரம்பகட்ட புலனாய்வை மேற்கொள்ளவும், தொழில்நுட்ப உத்தியோகத்தர் தன்னிச்சையாக மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்தும் ஆரம்பகட்டப் புலனாய்வுகளை முன்னெடுக்கவும் உரிய ஒழுக்காற்று அதிகாரிகள் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
புதிய சந்தைக் காணி கொள்வனவு, நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பில் மேலதிக விசாரணை
பருத்தித்துறை நகர சபையின் புதிய சந்தைக்கான காணி கொள்வனவு நடவடிக்கையில், மதிப்பீட்டு அறிக்கைக்கு முரணாகச் செயற்பட்டு, மதிப்பிடப்பட்ட தொகையைவிட அதிகமான கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டமை தொடர்பிலும் விசாரணை அறிக்கையில் அவதானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த விடயத்தில் தொடர்புடைய தரப்பினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் குறித்தும் மேலதிக விசாரணைகள் அவசியம் என அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
இதற்கமைய, குறித்த காணி கொள்வனவு மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து உரிய அதிகாரங்கள் கொண்ட தரப்பினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜே.சி.பி. இயந்திரப் பயன்பாடு தொடர்பிலும் விசாரணை
நகர சபையின் பணிகளுக்காக ஜே.சி.பி. இயந்திரம் உரிய கொள்வனவு நடைமுறைகளைப் பின்பற்றாமல் பணியில் ஈடுபடுத்தப்பட்டமை தொடர்பிலும் விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது குறித்தும் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த பணியை மேற்கொண்ட ஜே.சி.பி. இயந்திரத்தின் உரிமையாளர் நிர்வாகத்தின் தவறுகளால் பாதிக்கப்படக்கூடாது என்பதையும் ஆளுநர் கவனத்தில் கொண்டுள்ளார்.
அவருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கான நிவாரணத்தை, அதற்குப் பொறுப்பான நிர்வாகத் தரப்பினரிடமிருந்து பெற்றுக்கொடுக்க வேண்டும் என விசாரணை அதிகாரி பரிந்துரைத்துள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தம்பசிட்டி இணைப்பு வீதி தொடர்பில் சட்ட நடவடிக்கை
பருத்தித்துறை நகர சபையின் நிர்வாக எல்லைக்கு வெளியே, மற்றொரு உள்ளூராட்சி மன்றத்துக்குச் சொந்தமான வீதியைப் புனரமைக்கும் பணியை நகர சபை முன்னெடுத்தமை சட்ட ரீதியான சிக்கல்களுக்கு உட்படக்கூடிய விடயமாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்தத் திட்டத்தின் ஊடாகப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது எனவும், அவருக்கு ஏற்படக்கூடிய இழப்பீட்டை அதற்குப் பொறுப்பான தரப்பினரிடமிருந்து பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் விசாரணை அதிகாரி பரிந்துரைத்துள்ளார். இதற்கமைய, உரிய சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
நகர சபை உறுப்பினர் ஒருவரின் உறுப்புரிமை இடைநிறுத்தம்
புதிய சந்தைக் கட்டடத்தை மீளச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நகர சபை உறுப்பினர் ஒருவர் செயற்பட்டமை, விசாரணையின்போது முரண்பாடான சாட்சியங்களை வழங்கியமை மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு அனுப்பிய கடிதத்தைச் சமூக ஊடகத்தில் பதிவிட்டு, அவர் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயம் ஏற்படுவதற்கு வழிவகுத்தமை ஆகிய விடயங்கள் விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
குறித்த அவதானிப்புகளின் அடிப்படையில், அந்த உறுப்பினரின் உறுப்புரிமையை உடனடியாக இடைநிறுத்துவதுடன், தொடர்ந்து நடைபெறும் மூன்று சாதாரண நகர சபைக் கூட்டங்களில் பங்கேற்பதற்கும் தடை விதித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதிய சந்தைக் கட்டடத்தின் குறைபாடுகளை சீர்செய்ய நிபுணர் குழு
இதற்கிடையில், பருத்தித்துறை நகர சபையின் புதிய சந்தைக் கட்டடத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள குறைபாடுகளைச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக குழுவொன்று ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளது.
புதிய சந்தைக் கட்டடத்தில் காணப்படும் அனைத்துக் குறைபாடுகளையும் ஆராய்ந்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பிக்குமாறு குழுவுக்குப் பணிக்கப்பட்டுள்ளது.
குழுவின் பரிந்துரைகள் மற்றும் நகர சபையின் தீர்மானத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படும். குழுவின் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழுவின் பரிந்துரைகளை நகர சபையின் தவிசாளர், செயலாளர், உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகத்தினர் அனைவரும் ஏற்றுக்கொண்டு அதற்கமைவாகச் செயற்பட வேண்டும். அத்துடன், இந்தப் பணிகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதை உள்ளூராட்சி ஆணையாளர் நேரடி களப் பயணங்கள் ஊடாகக் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் எனவும் ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
பருத்தித்துறை நகர சபையின் நிர்வாகச் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, சட்ட ஒழுங்குகளுக்கு இணங்கிய பொறுப்புக்கூறல் மற்றும் பொதுமக்களுக்கான சேவையின் தரம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதே இந்த நடவடிக்கைகளின் நோக்கமாகும்.
விசாரணை அறிக்கையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உரிய கால எல்லைக்குள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும் ஆளுநர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.


