சென்னை முழுவதும் நான்கு நாட்களில் 567 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்
சென்னையில் பட்டாசு கழிவுகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த 4 நாட்களில் மொத்தம் 567 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு, பட்டாசுக் கழிவுகளை விரைந்து சேகரித்து அகற்றும் வகையில், வழக்கமாக காலை நேரப் பணியில் ஈடுபடுத்தப்படும் சுமார் 19,275 தூய்மைப் பணியாளர்களுடன் கூடுதலாக 600 தூய்மைப் பணியாளர்கள் சிறப்புப் பணிக்காக மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பட்டாசுக் கழிவுகளை அகற்றுவதற்காக டிப்பர் லாரிகள், ஜேசிபி இயந்திரங்கள், பாப்காட் இயந்திரங்கள் உள்ளிட்ட 350 கூடுதல் வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் சிறப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இவை தவிர, ஏற்கனவே களப்பணியில் ஈடுபட்டு வரும் சுமார் 5,000 வழக்கமான வாகனங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், பட்டாசுக் கழிவுகளைத் தனியாகச் சேகரித்து பாதுகாப்பாகக் கையாள்வதற்காக தூய்மைப் பணியாளர்களுக்கு 30,000 பிரத்யேக சேகரிப்புப் பைகள் வழங்கப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு, சென்னை மாநகரம் முழுவதும் கடந்த 7ம்தேதி அன்று 3.95 மெட்ரிக் டன், 8ம்தேதி அன்று 148.91 மெட்ரிக் டன், 9ம்தேதி அன்று 239.63 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை 3 மணி நிலவரப்படி, சுமார் 174.92 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் என மொத்தம் 567.41 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
பட்டாசுக் கழிவுகளை சேகரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட பட்டாசுக் கழிவுகள் வெடிக்காத பட்டாசுக் கழிவுகள் மற்றும் வெடிக்கப்பட்ட பட்டாசுக் கழிவுகள் என தரம் பிரிக்கப்பட்டு, அவை அறிவியல் பூர்வமாக அகற்றப்படும்.
வெடிக்காத பட்டாசுகள் தனியாகச் சேகரிக்கப்பட்டு, அவற்றை அகற்றுவதற்காக கும்மிடிப்பூண்டியில் உள்ள பிரத்யேக செயலாக்க மையத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
வெடிக்கப்பட்ட பட்டாசுகளிலிருந்து உருவாகும் காகிதங்கள், அட்டைப் பெட்டிகள் மற்றும் ரசாயனக் கலவைகள் இல்லாத இதர எரியக்கூடிய கழிவுகள் தனியாகச் சேகரிக்கப்பட்டு, கொடுங்கையூரில் அமைந்துள்ள 50 மெட்ரிக் டன் திறன் கொண்ட எரியூட்டும் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அறிவியல் பூர்வமாக அகற்றப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


