இலங்கையில் முதன்முறையாக ஆளில்லா பயணிகள் ட்ரோன் சேவை.!
இலங்கையின் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தைக் குறிக்கும் வகையில், நாட்டின் முதலாவது ஆளில்லா பயணிகள் ட்ரோன் (Autonomous Passenger Drone) சேவைக்கான அதிகாரப்பூர்வ சோதனைப் பறப்பு இன்று கொழும்பு துறைமுக நகர (Port City) வளாகத்தில் மிகக் கோலாகலமாக நடத்தப்பட்டது.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இச்சோதனை ஓட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
மேலும், பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல ஆகிய உயர் அதிகாரிகளுடன், பாதுகாப்பு அமைச்சு, இலங்கை விமானப்படை மற்றும் சீன EHang நிறுவனத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் சிறப்பதிபதிகளாகப் பங்கேற்றனர்.
இலங்கையில் ஆளில்லா பயணிகள் போக்குவரத்துச் சேவையைத் தொடங்குவதற்கான முன்னோட்டமாகச் செயல்படுத்தப்படும் இச்சோதனைக்காக, சீன நிறுவனமான EHang தயாரித்த ‘eVTOL’ வகையைச் சேர்ந்த E216 ரக பயணிகள் ட்ரோன் பயன்படுத்தப்பட்டது.
சாதாரண விமானங்களைப் போல ஓடுபாதை தேவையின்றி, செங்குத்தாகப் புறப்பட்டுத் தரையிறங்கும் திறன் கொண்டதே இதன் சிறப்பம்சமாகும்.
ஒரே நேரத்தில் இரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய இந்த வானூர்தி 16 சுழலிகள், 12 மின்கலத் தொகுப்புகள் மற்றும் மூன்று விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகளைக் கொண்டு, அதிநவீன கணினி முறைமை மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.
மேலும், ஏதேனும் அவசரநிலை, விபத்து அல்லது தகவல் தொடர்புத் தோல்வி ஏற்பட்டால் தானாகவே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தொழில்நுட்ப வசதியும் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் ஆரம்பத்தில் வணிகச் சேவையாக அல்லாமல் ஒரு பரிசோதனை முயற்சியாகவே செயல்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கொழும்பு துறைமுக நகரத்தைச் சுற்றியுள்ள வான்பரப்பில் சுமார் ஆறு மாத காலத்திற்குப் பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்படவுள்ளன.
எதிர்காலத்தில் இச்சேவை வணிக ரீதியாக முழுமையடையும் போது, சிகிரியா, பிதுரங்கல மற்றும் தீவுகளில் அமைந்துள்ள நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்குப் பயணிகளை வான்வழியாக விரைவாக அழைத்துச் செல்வதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






