“நீங்கள் வெட்கப்பட வேண்டும்”: சீதையின் காட்சிகளை விமர்சித்த முகேஷ் கண்ணா!
நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த நவம்பர் 5 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
வெளியான ஐந்து நாட்களில் இந்தத் திரைப்படம் இந்தியா முழுவதும் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, இந்தத் திரைப்படத்தில் சாய் பல்லவி ஏற்றுள்ள சீதை கதாபாத்திரம் உருவகப்படுத்தப்பட்டுள்ள விதம் குறித்து பிரபல நடிகர் முகேஷ் கண்ணா கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
படத்தில் சீதை கதாபாத்திரம் தைரியமான போராளியாகக் காட்டப்பட்டுள்ள விதம் பலரிடையே பாராட்டுகளைப் பெற்றுவரும் நிலையில், முகேஷ் கண்ணாவின் இந்த விமர்சனம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், வால்மீகி ராமாயணத்தில் சீதை சண்டையிடுவது போன்ற நிகழ்வுகள் எங்குமே இல்லை என்றும், தான் படித்த மற்றும் அறிந்த வரையில் சீதை எவருடனும் சண்டையிட்டதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் ‘மரியாதா புருஷோத்தமரான’ ராமனின் மனைவி என்றும், மிகுந்த பக்தி கொண்டு தன் கணவருடன் 14 ஆண்டுகள் வனவாசத்திற்கு மனமுவந்து உடன் சென்றவர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், சீதையின் குணாதிசயத்தை மாற்றி அவரை ஒரு போராளியாகச் சித்தரிப்பது சரியல்ல என்றும், அவர் ஒரு போராளியாக இருந்திருந்தால் அப்போதே ராவணனுடன் சண்டையிட்டிருக்கலாமே தவிர, அவ்வளவு எளிதாகக் கடத்தப்பட்டிருக்க முடியாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தாங்கள் இதுபோன்ற இதிகாசக் கதைகளைக் கேட்டு வளர்ந்ததாகவும், சமீபகாலமாக சில ‘ராமலீலா’ நிகழ்ச்சிகளிலும் கூட சீதை சண்டையிடுவது, தற்காப்புக் கலைகளில் ஈடுபடுவது, வாள் வீசுவது போன்ற புதிய காட்சிகள் சேர்க்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், இதுபோன்ற செயல்களுக்குச் சம்பந்தப்பட்டவர்கள் வெட்கப்பட வேண்டும் என்றார்.
சீதையை ஒரு போராளியாகச் சித்தரிப்பதன் மூலம் நவீன காலப் பெண்களைக் கவர முயல்வதாகவும், சிலர் இதை ‘பெண்ணியம்’ என்று அழைப்பதாகவும் குறிப்பிட்ட முகேஷ் கண்ணா, பெண்ணியம் குறித்து தனக்குப் பெரிய புரிதல் இல்லாவிட்டாலும், அது பெண்களை வலிமையானவர்களாகக் காட்ட முயல்வதை தான் மறுக்கவில்லை என்று தெரிவித்தார்.
இருப்பினும், ராமாயணத்தில் சீதை என்பவள் சீதை மட்டுமே என்பதால், நவீன நோக்கங்களுக்காக அவளது கதாபாத்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றும், அது முற்றிலும் தவறான செயல் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.


