தேசிய கூடைப்பந்தாட்ட இறுதிப் போட்டிக்கு யாழ். இந்துக் கல்லூரி அணி தகுதி.!
இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் தேசிய ரீதியிலான பாடசாலைகள் கூடைப்பந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 20 வயதுப் பிரிவு கூடைப்பந்தாட்ட அணி தகுதிபெற்றுள்ளது.
நாடளாவிய ரீதியில் புகழ்பெற்ற பாடசாலைகள் பல மோதிக்கொண்ட இந்தத் தொடரில் தொடக்கம் முதலே மிக நேர்த்தியான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வந்த யாழ். இந்துக் கல்லூரி அணியினர், பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
இந்தத் தொடரில் பங்குபற்றிய யாழ். இந்துக் கல்லூரி அணியினர், காலிறுதிப் போட்டியில் கிராண்ட்பாஸ் சென் ஜோசப் கல்லூரி அணியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றியீட்டினர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அரையிறுதி ஆட்டத்தில் காலி சென் அலோசியஸ் கல்லூரி அணியையும் வீழ்த்தியே அவர்கள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்தத் தொடரின் சம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டியானது இன்று புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு கொழும்பு சுகதாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இன்றைய இறுதிப்போட்டியில் கொழும்பு அமல் சர்வதேச கல்லூரியின் பலம் வாய்ந்த அணியை எதிர்த்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி வெற்றிக்காகக் களமாடவுள்ளது.
தேசிய மட்டச் சம்பியன் பட்டத்துக்காகப் போட்டியிடும் யாழ். இந்துக் கல்லூரி அணியினருக்கு வடக்கு மாகாண கல்விச் சமூகத்தினரும் விளையாட்டு ஆர்வலர்களும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


