மூன்று பிள்ளைகளின் தாய் கொ**லை; மதுபோதையில் கணவர் வெறியாட்டம்.!
அம்பாந்தோட்டை – வலஸ்முல்லை பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக கணவரினால் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டு, மூன்று பிள்ளைகளின் தாயாரான குடும்பப் பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் வலஸ்முல்லை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் எனத் தெரியவந்துள்ளது.
நேற்று மாலை மதுபானம் அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த கணவனுக்கும் மனைவிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கணவர் வீட்டில் இருந்த கூரிய ஆயுதத்தை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டினார் என்று கூறப்படுகின்றது.
தாக்குதலுக்கு இலக்காகிப் பலத்த காயமடைந்த அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கொலைச் சம்பவத்தைச் செய்த பின்னர் 42 வயதுடைய கணவர் அந்தப் பகுதியிலிருந்து தலைமறைவாகி தப்பியோடியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தை மீட்டதுடன், அதைப் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தப்பியோடிய கொலையாளியைக் கைது செய்வதற்காகப் பொலிஸாரால் தீவிர தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


