நுவரெலியாவில் கனமழை
மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதுடன், கடும் பனிமூட்டமும் நிலவி வருகிறது.
நுவரெலியா, நானுஓயா, லிந்துலை, தலவாக்கலை, ஹட்டன், டிக்கோயா, கொட்டகலை, பொகவந்தலாவ, நோர்வூட், மஸ்கெலியா, நல்லதண்ணி, நோட்டன், வட்டவளை உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த காலநிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வீதிகள் வழுக்கும் நிலையில் காணப்படுவதால், சாரதிகள் வாகனங்களின் மின்குமிழ்களை ஒளிரச் செய்து, மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு ஹட்டன் வலய காவல்துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, வார இறுதி விடுமுறையை முன்னிட்டு சிவனொளிபாதமலைக்கு செல்லும் பக்தர்கள், குறிப்பாக இளைஞர், யுவதிகள் அவதானமாக செயற்படுமாறு நல்லதண்ணி பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். மழை காரணமாக மலைப் படிக்கட்டுகளில் அதிகளவு நீர் செல்வதால், தவறி விழும் அபாயம் காணப்படுவதாகவும், மழை நேரத்தில் மலைக்குச் செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், பாடசாலை மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நீர்த்தேக்கங்களுக்கு நீரை வழங்கும் பிரதான ஆறுகள், ஓடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அவற்றுக்கு அருகில் செல்வதை தவிர்க்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை, மேல் கொத்மலை, மவுசாக்கலை, கொத்மலை, காசல்ரீ உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதுடன், சில நீர்மின் நிலைய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் ஊடாக நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.