நோர்வூட் மின் தகனசாலை பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு
நோர்வூட் மின் தகனசாலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கற்கள் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று (01) இரவு இந்த சட்டவிரோத அகழ்வுப் பணிகள் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெசல்கமுவ ஓயாவை அண்மித்த பல்வேறு பகுதிகளில், சட்டவிரோதமாக மாணிக்கக்கற்கள் அகழப்பட்டு வருவதாகவும், அகழ்வின்போது தோண்டப்படும் மண் மற்றும் கற்கள் யூரியா உரைப் பைகளில் அள்ளிச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று அகழ்வில் ஈடுபட்டவர்கள் சில யூரியா உரைப் பைகளை அப்பகுதியில் விட்டுச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், பெறுமதிமிக்க தேயிலைச் செடிகள் மற்றும் மின் தகனசாலைக்குச் செல்லும் பிரதான வீதியை அண்மித்த பகுதிகளும் சட்டவிரோத அகழ்வினால் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வைத் தடுத்து நிறுத்த தோட்ட மக்கள் மற்றும் நோர்வூட் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.