குறைந்த வருமானத்தினருக்கு 5,000 வீடுகள் கையளிப்பு
உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு, குறைந்த வருமானம் கொண்டவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் எதிர்வரும் ஒக்டோபர் 05ஆம் திகதி மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்படவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ரீ.பி. சரத் தெரிவித்துள்ளார்.
வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் 10,000 வீடுகள் திட்டத்தின் கீழ், தற்போது 5,000க்கும் மேற்பட்ட வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேலும் 2,500 வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், நிறைவடைந்த வீடுகளை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வுகள் ஒக்டோபர் 05ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.