அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் காணி விவகாரம் குறித்து முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை விமர்சித்துள்ளார்.
நாட்டில் பணவீக்கம் மற்றும் உணவுப் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதனால் மக்களின் வாழ்க்கைச் செலவு உயர்ந்து வாங்கும் சக்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் எரிபொருள் நிவாரணத்திற்காக 4,100 மில்லியன் ரூபாய் ஒதுக்கியதாக அறிவித்த போதிலும், நடைமுறையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், மத்திய கிழக்கு போர்ச் சூழலை விலை உயர்வுக்கான காரணமாக அரசாங்கம் குறிப்பிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அத்துருகிரிய ‘மில்லேனியம் சிட்டி’ வீட்டுத் திட்டத்திற்குச் சொந்தமான சுமார் 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான 100 பேர்ச் காணி அரசாங்க அரசியல்வாதிகளால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டதாகவும் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி தனியார் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவது வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்