ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரானின் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும்!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல்களுக்கு இராஜதந்திர பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரான் முன்வைத்திருந்த முன்மொழிவை நிராகரித்ததாகத் தெரிவித்துள்ள பின்னணியில், ஈரான் இந்த நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி சமூக ஊடகப் பதிவொன்றில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரான் முன்வைத்துள்ள நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி பேச்சுவார்த்தை மூலம் தீர்வை எட்டுவதே எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், கட்டார் மத்தியஸ்தம் மூலம் அமெரிக்காவிடம் ஈரான் இந்த முன்மொழிவை கையளித்திருந்தது.
குறித்த முன்மொழிவின் அடிப்படையில், ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும் பிராந்தியத்தில் இடம்பெறும் மோதல்களை நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க முடியும் என ஈரான் தெரிவித்திருந்தது.
எனினும், ஈரான் மிகுந்த நெருக்கடியான சூழ்நிலையில் இருப்பதாலேயே இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளதாகக் கூறிய ட்ரம்ப், அதனை நிராகரித்ததாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்கா தமது முன்மொழிவை அதிகாரப்பூர்வமாக நிராகரித்ததாக மத்தியஸ்தர்கள் இதுவரை அறிவிக்கவில்லை என அராக்சி குறிப்பிட்டுள்ளதுடன், அமெரிக்காவின் இறுதி நிலைப்பாட்டை மத்தியஸ்தர்கள் மூலம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.