உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

அந்தமான் தீவுகளை அண்மித்த கடற்பரப்பிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு பலநாள் மீன்பிடிப் படகுகளுக்கு அறிவுறுத்தல்

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
23 பார்வைகள்

அந்தமான் தீவுகளை அண்மித்த ஆழ்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் காரணமாக எதிர்வரும் சில நாட்களில் குறித்த கடற்பரப்பில் கடல் கொந்தளிப்பாகவும், பலத்த காற்றுடனும் காணப்படக்கூடிய அபாயம் நிலவுவதால், அப்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடும் அனைத்து பலநாள் மீன்பிடிப் படகுகளும் உடனடியாக அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான பிரதேசங்களுக்குச் செல்லுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

குறித்த குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய வானிலை அறிவித்தலின் அடிப்படையில், நாட்டின் கிழக்குப் பகுதியில், குறிப்பாக அந்தமான் தீவுகளை அண்மித்த ஆழ்கடல் பகுதியில் இந்த நிலைமை உருவாகியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.

ஏற்பட்டுள்ள வானிலை நிலைமை தொடர்பில் இன்று (21.09.2026) கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில், திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த இந்த விடயத்தை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தக் குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் படிப்படியாக வலுவடைந்து இந்தியாவை நோக்கி நகர்ந்து, இந்தியத் தரைப்பரப்பை அடையும் நிலை காணப்படுவதாகவும், இதன் தாக்கம் முழுமையாகத் தணிவடைய மேலும் சில நாட்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனையடுத்து, அந்தமான் தீவுகளை அண்மித்த கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடும் பலநாள் மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, குறித்த பிரதேசத்திலிருந்து உடனடியாக வெளியேறி கரையை நோக்கியோ அல்லது வேறு பாதுகாப்பான பிரதேசங்களுக்கோ செல்லுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர்கள் குறைந்த காற்றழுத்தப் பிரதேசத்திலிருந்து விரைவாக விலகிச் செல்வதற்காக இலங்கையை நோக்கி (தெற்கு திசையில்) பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றன.

எனினும், குறித்த பிரதேசத்தில் இன்னும் சில பலநாள் மீன்பிடிப் படகுகள் கடற்றொழிலில் ஈடுபட்டு வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு தொடர்ந்தும் கடற்றொழிலில் ஈடுபடுவதன் மூலம் எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய கொந்தளிப்பான கடல் நிலை மற்றும் பலத்த காற்று காரணமாக படகுகளுக்கும் அதிலுள்ள பணியாளர்களுக்கும் ஆபத்து ஏற்படக்கூடும்.

இதனிடையே, குறைந்த காற்றழுத்தப் பிரதேசத்தின் தாக்கம் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளிலும் உணரப்படக்கூடிய வாய்ப்புள்ளதால், சிறிய அளவிலான கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அந்தந்த நாளில் நிலவும் கடல் நிலைமை மற்றும் காற்றின் வேகத்தை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும்.

தற்போது நிலவும் நிலைமையின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் கடற்றொழிலுக்குத் தடை விதிக்கும் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், எனினும் நிலைமைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன், வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிவித்தல்களுக்கு அமைவாக கடற்றொழில் நடவடிக்கைகள் தொடர்பான தேவையான அறிவுறுத்தல்கள் அவ்வப்போது வெளியிடப்படும்.

எனவே, அனைத்து மீனவர்களும் வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் வெளியிடும் வானிலை அறிவித்தல்கள் மற்றும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை அவதானமாகப் பின்பற்றி, கடற்றொழிலுக்குச் செல்வதா அல்லது தவிர்ப்பதா என்பதை நிலவும் கடல் நிலைமைக்கு ஏற்ப தீர்மானிக்குமாறு பணிப்பாளர் சுசந்த கஹவத்த கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், கடற்றொழிலுக்காகக் கடலுக்குச் செல்லும் போதும், கடற்றொழிலில் ஈடுபடும் போதும், மீண்டும் கரைக்குத் திரும்பும் போதும் உயிர்காப்பு அங்கிகளை கட்டாயமாக அணிந்து கொள்ளுமாறும் மீனவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் சீரற்ற காலநிலை நிலவிய சந்தர்ப்பங்களில் வானிலை அறிவித்தல்கள் மற்றும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் புறக்கணித்ததன் காரணமாகவும், உயிர்காப்பு அங்கிகளை அணியாததன் காரணமாகவும் மனித உயிர்கள் பலியான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், தற்போதைய காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைத் தவிர்க்கும் வகையில், மீனவர்கள் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை உரிய முறையில் பின்பற்றி செயற்பட வேண்டியது அவசியம்.

அந்தமான் தீவுகளை அண்மித்த கடற்பரப்பில் காணப்படும் நிலைமைகள் தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் தொடர்ச்சியாகக் கண்காணிப்புகளை மேற்கொண்டு வருவதுடன், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் புதிய வானிலை அறிவித்தல்களுக்கு அமைவாக தற்போதைய அறிவுறுத்தல்களும் தேவைக்கேற்ப மீளாய்வு செய்யப்பட்டு மாற்றியமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் காணப்படும் பலநாள் மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்களுக்கு உடனடியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், வானொலி தொடர்பாடல் கருவிகள் மூலமாகவும் படகுகளில் உள்ளவர்களுக்கு உடனடியாக அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரெலியா மற்றும் ஹட்டனில் 13 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 13 தமிழ் மற்றும் சிங்கள மொழிப் பாடசாலைகளுக்கு இன்று (21) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா…

26 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து சவூதி ஊடகங்களோ தூதரகமோ இன்னமும் உறுதிப்படுத்தவில்லை!

சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள நற்பிட்டிமுனை இளைஞர் சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தள முகநூல் ஊடகங்களே (FB News Agencies) செய்தி வெளியிட்டு…

15 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை முஹம்மதிய்யா மத்ரஸாவின் முதலாவது ஹாபிழா பாத்திமா நஸ்காவிற்கு மகத்தான கௌரவிப்பு!

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் கீழ் இயங்கி வரும் முஹம்மதிய்யா பெண்கள் பகுதி நேர ஹிப்ழ் மத்ரஸாவிலிருந்து முதலாவது அல்-ஹாபிழாவாகப் பட்டம் பெற்ற முஹம்மது பஹ்மி…

22 0 0
இலங்கை செய்திகள்

22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக செப்டம்பர் 24ல் கொழும்பில் பிரம்மாண்ட போராட்டம்!

22வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அரசாங்கம் நாட்டில் ஒரு சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.…

26 0 0