கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!
வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர், 20.11.2026 அன்று ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கில் பல காணிகள் அரச திணைக்களங்களால் எல்லைக் கற்கள் நாட்டப்பட்டு தமது வசமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, உரிய நில அளவீடுகள் மேற்கொள்ளப்படாமல் கூகுள் கருவியின் மூலம் அடையாளம் காணப்பட்ட காணிகள் காடுகளாக வகைப்படுத்தப்பட்டு அரச நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த காலத்தில் மக்கள் இடம்பெயர்ந்ததால், அவர்கள் விட்டுச் சென்ற காணிகள் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாமல் காடுகளாக மாறியிருந்தன.
இதனால் பறவைகள் மற்றும் விலங்குகள் குடியிருக்கும் பகுதிகளாக அவை காணப்பட்ட நிலையில், அவற்றை காடுகளாக அடையாளப்படுத்தி கைப்பற்றியிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் மழைக்காலம் நெருங்கி வருவதால், குறித்த காணிகள் மக்களுக்கு விடுவிக்கப்பட்டால் விவசாயம் மற்றும் நன்னீர் வேளாண்மை உள்ளிட்ட வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க பெரிதும் உதவியாக அமையும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் 1983ஆம் ஆண்டு நிலைமையை அடிப்படையாகக் கொண்டு காணிகளை கணக்கிட்டு, எஞ்சிய காணிகளை மக்களிடம் பகிர்ந்தளிக்கும் கொள்கைத் திட்டம் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், தேர்தல் காரணமாக அது கைவிடப்பட்டதாகவும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அதேபோன்றதொரு கொள்கை அடிப்படையில் காணிகளை விடுவிப்பதற்கான திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தினால் வடக்கு மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதுடன், பிரதான மற்றும் உப பயிர்ச்செய்கைகளை விரிவுபடுத்தவும் வாய்ப்பாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
காணிகள் விடுவிப்பு தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ள டக்ளஸ் தேவானந்தா, இதற்கான ஜனாதிபதியின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



