மன்னாரில் பிரமாண்டமாக இடம் பெற்று நிறைவடைந்த MSPL-2026: மென்பந்து கிரிக்கெட் திருவிழா!
மன்னாரில் AA Sports நிறுவனத்தின் முழுமையான அனுசரணையில், அதன் நிறுவனர் அமல்ராஜன் தலைமையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட Mannar Soft Ball Premier League – MSPL-2026 தொடரின் பிரமாண்ட இறுதிப் போட்டி நேற்று (20) இரவு 11 மணியளவில் விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவடைந்தது.
மின்னொளியில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தத் தொடரில், இலங்கையின் முன்னணி மென்பந்து வீரர்கள் பலரும் பங்கேற்றிருந்ததுடன், ஒவ்வொரு அணியிலும் தலா ஒரு முன்னணி வீரர் இடம்பெறும் வகையில் அணிகள் கட்டமைக்கப் பட்டிருந்தன.
தொடர் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் Mannar Super Kings அணி வெற்றி பெற்று MSPL-2026 சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.
இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய Mannar CC அணி இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது. அந்த அணிக்கு ரூ.150,000 பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
இறுதிப் போட்டியின் நிறைவில், பிரதம விருந்தினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் வெற்றி பெற்ற அணியினருக்கு வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இறுதிப் போட்டியின் போது மின்தடை மற்றும் மழை போன்ற சவால்கள் ஏற்பட்ட போதிலும், பெருமளவான ரசிகர்கள் மைதானத்திற்கு வருகை தந்து போட்டியை நேரடியாக பார்வையிட்டனர்.
மின்னொளியில் அமைக்கப்பட்ட பிரமாண்ட மைதானம், ரசிகர்களின் ஆரவாரம், முன்னணி வீரர்களின் பங்கேற்பு மற்றும் பரபரப்பான இறுதிப் போட்டி என MSPL-2026 மன்னாரின் விளையாட்டு வரலாற்றில் கவனம் பெற்ற தொடராக நிறைவடைந்தது.
AA Sports நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெறும் இந்தத் தொடரானது, மன்னாரில் மென்பந்து கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும் உள்ளூர் வீரர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் முக்கியமான தளமாக அமைந்துள்ளது.






