அனோஜனைக் காப்பாற்ற கட்சி பேதமின்றி சகல கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.!
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கையரான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சவூதி அரேபியாவின் சட்ட முறைமை இலங்கையின் சட்ட முறைமையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது எனவும், அங்கு ஷரீஆ சட்டத்தின் அடிப்படையில் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தான் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்த காலத்தில் ரிசானா நபீக் தொடர்பான வழக்கில் தலையிட்ட அனுபவத்தை நினைவு கூர்ந்த அவர், அப்போது ரிசானா நபீக்கைக் காப்பாற்ற இலங்கை அரசு சவூதி அரசரிடம் மன்னிப்புக் கோரியதைச் சுட்டிக்காட்டினார். ஷரீஆ சட்டத்தின் கீழ் உயிரிழந்தவரின் குடும்பத்தினரின் மன்னிப்பும் இங்கு மிக முக்கியமானதாகும் என்றார்.
அனோஜன் கொலைக் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றவர் அல்லவெனக் குறிப்பிட்ட அவர், ஆரம்பத்தில் மதத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஐந்து வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது எனவும், பின்னர் மேன்முறையீட்டின்போது மரணதண்டனை விதிக்கப்பட்டது எனவும் அவரது சட்டத்தரணி தூதரகத்துக்கு வாய்மொழியாகத் தெரிவித்துள்ள போதிலும், உத்தியோகபூர்வ எழுத்துமூலத் தீர்ப்பு இன்னும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் யார் சரி, யார் தவறு என்று விவாதித்துக் கொண்டிராமல், அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதிலேயே முழுமையான கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து சவூதி அதிகாரிகளிடம் மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை கோர வேண்டும் எனவும், ரிசானா நபீக் வழக்கிலிருந்து பெற்ற அனுபவத்தைப் பயன்படுத்தி அனைத்துச் சட்டபூர்வமான மற்றும் இராஜதந்திர வழிகளையும் ஒருங்கிணைத்து முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
உயிருடன் இருக்கும் ஒருவரை மரணதண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில், இந்த விவகாரத்தை அரசியல் இலாபத்துக்காகப் பயன்படுத்தாமல் காலதாமதமின்றி அரசு, எதிர்க்கட்சிகள், தூதரக அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் இணைந்து மனிதாபிமான அடிப்படையில் செயற்பட வேண்டும் எனவும் டிலான் பெரேரா மேலும் வலியுறுத்தினார்.