பிரதமர் ஹரிணிக்கும் புதிய சீனத் தூதுவருக்கும் இடையே கலந்துரையாடல்
பிரதமர் ஹரிணியைச் சந்தித்த புதிய சீனத் தூதர்
இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல்
இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாஷியாங்குக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுப் புதன்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்றது.
2027 ஆம் ஆண்டில் கொண்டாடப்படவுள்ள இலங்கை – சீன இருதரப்பு இராஜதந்திர உறவுகளின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கல்வி, டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் அபிவிருத்தித் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் இதன்போது கவனம் செலுத்தினர்.
பாடசாலை மாணவர்களுக்காகச் சீன அரசு வழங்கும் சீருடை உதவி தொடர்பில் விசேடமாகக் கலந்துரையாடப்பட்டது. வருடாந்த தற்காலிக ஏற்பாட்டுக்குப் பதிலாக, கல்வி ஆண்டின் ஆரம்பத்தில் உரிய நேரத்தில் சீருடைகளை வழங்கும் வகையில், 3 முதல் 5 வருடங்கள் வரையான நீண்டகாலக் கட்டமைப்பின் ஊடாக இந்த உதவியை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டன.
கல்வித்துறையை டிஜிட்டல்மயமாக்கும் நடவடிக்கையாக, சீனாவின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டல் கல்வித் திட்டத்தின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டது. இதன் கீழ், நாடளாவிய ரீதியிலுள்ள 500 டிஜிட்டல் வகுப்பறைகளுக்காக 900 ஸ்மார்ட் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன், கல்வி டிஜிட்டல்மயமாக்கல் கொள்கைகளைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள டிஜிட்டல் செயலணிக்குழு குறித்துப் பிரதமர் தூதுவருக்கு விளக்கமளித்ததுடன், சீன அரசின் முழுமையான ஆதரவையும் தூதுவர் உறுதிப்படுத்தினார்.
சீன அரசின் புலமைப்பரிசில் திட்டம் மற்றும் சீனத் தூதுவர் புலமைப்பரிசில் திட்டம் மூலம் இலங்கை மாணவர்களுக்குக் கிடைக்கும் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்தும், பிள்ளைகளின் இணையப் பாதுகாப்பை உறுதிப்படுத்தப் பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் பேசப்பட்டது.
‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளின்போது சீனா வழங்கிய ஒத்துழைப்பைப் பிரதமர் பாராட்டியதுடன், திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ள நிலைமையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்களுக்குத் தனது கவலையையும் தெரிவித்தார்.
மேலும், காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுக்கும் திறனை மேம்படுத்த இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.







