எமது கூட்டங்களுக்கு வருபவர்கள் மது அருந்துவதும் அருந்தாமல் இருப்பதும் அவர்களின் தனிப்பட்ட உரிமை.!
“எமது கூட்டங்களுக்கு வருகை தருபவர்களை மதுபானம் அருந்தாமல் வருமாறு கட்டளையிடும் அதிகாரம் எங்களிடம் கிடையாது. மது அருந்துவதும் அருந்தாமல் இருப்பதும் அவரவர் தனிப்பட்ட உரிமையாகும். நாங்கள் யாருக்கும் மது அருந்திவிட்டு வருமாறு குறிப்பிடவும் இல்லை, கட்சிக் கூட்டத்துக்காக மதுபானம் வாங்கிக் கொடுக்கவும் இல்லை.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைச் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது,
“அனுராதபுரத்தில் இடம்பெற்ற எமது கட்சியின் மக்கள் பேரணியில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஏழை விவசாயிகளும், உழைக்கும் தொழிலாளர்களும் திரளாகக் கலந்துகொண்டார்கள். ஆனால், அக்கூட்டத்துக்கு வந்த மக்களை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் வேண்டுமென்றே திரிபுப்படுத்தப்பட்ட காணொளிகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இலங்கையில் ஒவ்வொரு வருடமும் பெருந்தொகையான மதுபானம் உற்பத்தி செய்யப்படுகின்றது. அவற்றை இந்த நாட்டு மக்கள்தான் குடிக்கின்றார்கள். மதுபானம் அருந்துவதும், அதனைத் தவிர்ப்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பமும் உரிமையுமாகும். எமது கூட்டங்களுக்கு மதுபானம் அருந்தாமல் வரவேண்டும் என்று நாங்கள் எவருக்கும் நிபந்தனை விதிக்கவில்லை. அதேபோல், கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு எமது தரப்பிலிருந்து எந்தவிதமான மதுபானமும் வாங்கிக் கொடுக்கப்படவில்லை.” – என்றார்.