பொது இடத்தை பறிக்க வேண்டாம்; மக்கள் ஆர்ப்பாட்டம்.!
கொட்டகலை ரொப்கில் தோட்டப் பகுதியில் பொதுமக்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வரும் பொது இடத்தை தனியார் தேவைக்காக வழங்கி, மரப்பலகை ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரொப்கில் தோட்டத்திற்குச் செல்லும் பிரதான நுழைவாயில் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ரொப்கில் தோட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கையில்,
குறித்த இடம் கடந்த பல வருடங்களாக தங்களின் பொதுத் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
குறிப்பாக, அப்பகுதியில் அமைந்துள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களின் விசேட நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக நிகழ்வுகள் குறித்த இடத்தில் இடம்பெற்று வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், சீரற்ற காலநிலையின்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளையும் குறித்த இடத்திலிருந்தே முன்னெடுத்து வந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தாங்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வரும் இந்த பொது இடத்தை தோட்ட நிர்வாகம் தனியாருக்கு வழங்கி, அங்கு மரப்பலகை ஆலை ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தோட்ட இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ரொப்கில், எரிடன், தொலைச்சாலைபுரம் உள்ளிட்ட நான்கு பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் குறித்த வீதியை பல வருடங்களாக பயன்படுத்தி வருவதாக தெரிவித்தனர்.
இதுவரை எவ்வித பிரச்சினையும் இன்றி மக்கள் பயன்படுத்தி வந்த இந்த அமைதியான பகுதியில் மரப்பலகை ஆலை அமைக்கப்பட்டால், பொதுமக்களின் அன்றாட போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டனர்.
அத்துடன், ஆலயங்களின் திருவிழாக்கள் மற்றும் சமய நிகழ்வுகளை நடத்துவதிலும் சிக்கல் ஏற்படும் என்றும், பாடசாலை மாணவர்கள் இந்த வீதியைப் பயன்படுத்துவதில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், மரப்பலகை ஆலையின் நடவடிக்கைகளினால் ஏற்படக்கூடிய தூசி காரணமாக நோயாளர்கள் மற்றும் வயோதிபர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் சுகாதாரமும் பாதிக்கப்படக்கூடும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
எனவே, பொதுமக்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வரும் குறித்த இடத்தில் மரப்பலகை ஆலையை அமைக்காமல், அதற்காக மாற்று இடம் ஒன்றை தெரிவு செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே, ரொப்கில் தோட்ட மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் மற்றுமொரு பிரச்சினையையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்தனர்.
சீரற்ற காலநிலையின்போது தமது பகுதிகள் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுவதாக தெரிவித்த அவர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொள்வதற்காக காணிகளை வழங்குமாறு தோட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை காணிகள் வழங்கப்படவில்லை என தெரிவித்தனர்.
அதேபோன்று, வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் வகையில் ஆற்றை அகலப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்த போதிலும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இவ்வாறான நிலையில், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் தேயிலைச் செடிகளை அகற்றி மரப்பலகை ஆலை அமைப்பதற்கான நடவடிக்கை எடுப்பது நியாயமானதா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
‘எந்த காரணத்தைக் கொண்டும் இந்த இடத்தில் மரப்பலகை ஆலை அமைக்க அனுமதிக்க மாட்டோம். பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இந்த இடத்தை பாதுகாக்கும் வரை எமது போராட்டம் தொடரும்’ என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
பொதுமக்களின் போக்குவரத்து, சமய நடவடிக்கைகள், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை கருத்தில் கொண்டு, குறித்த திட்டத்தை மறுபரிசீலனை செய்து மாற்று இடத்தில் மரப்பலகை ஆலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது.
இந்த நிலையில், பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் முன்வைக்கப்பட்டுள்ள மரப்பலகை ஆலைத் திட்டம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, மக்களின் கோரிக்கைக்கு தீர்வு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.