சீமானுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய விஜயலட்சுமி!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்திருந்த முறைப்பாடு தொடர்பான வழக்கில், இருதரப்புக்கும் இடையே உச்சநீதிமன்றத்தில் சமரசம் எட்டப்பட்டது.
இந்த நிலையில், அவர் வெளியிட்டுள்ள புதிய காணொளியில், சிலர் தன்னையும் சீமானையும் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தவறை உணர்ந்து ஒருவர் மன்னிப்பு கேட்கும்போது, அவரைத் தொடர்ந்து விமர்சிக்காமல் வாழவிடுவதுதான் மனிதநேயம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னைப் பற்றியும் சீமான் குறித்தும் தொடர்ந்து அவதூறாகப் பேசினால், இனி சீமானுக்கு ஆதரவாக உறுதியாக நிற்பேன் என்றும் விஜயலட்சுமி கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாகப் பேசுவதற்காக தனக்கு பணம் வழங்கப்பட்டதாக கூறப்படும் விமர்சனங்களை மறுத்துள்ள அவர்,பணத்தைக் கொடுத்து தன்னை யாராலும் வாங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதுவரை சீமானுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வந்த விஜயலட்சுமி, தற்போது அவருக்கு ஆதரவாக பேசியிருப்பது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
எனினும், இந்த காணொளி மூலம் தமிழக வெற்றிக் கழகத்தினரை அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் வெளியாகி வருகின்றன.