கொக்கலை மற்றும் செம்மணி அகழ்வாராய்ச்சிகளுக்கு சர்வதேச நிதி உதவி கோர வேண்டும்.!
கொக்கலை மற்றும் செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பான அகழ்வாராய்ச்சி மற்றும் ஆய்வுகளைத் தொடர்ந்து முன்னெடுக்க அரசாங்கம் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், நிதி பற்றாக்குறை நிலவினால் சர்வதேச நாடுகளின் உதவியைப் பெற வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கொக்கலை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடு தொகுதிகளில், பல மண்டையோடுகள் வாய்கள் திறந்த நிலையில் காணப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.
மனித உடல் உணர்வோடு இருக்கும் போதோ, உயிருடனோ அல்லது உயிருக்குப் போராடும் நிலையிலோ தாக்கப்படும் போது மட்டுமே இதுபோன்ற அமைப்பில் எலும்புக்கூடுகள் அமையக்கூடும் எனக் குறிப்பிட்ட அவர், இதுகுறித்த முறையான அறிவியல் பூர்வ நுண் ஆய்வுகள் இதுவரை முழுமையாகச் செய்யப்படவில்லை என ஆதங்கம் தெரிவித்தார்.
செம்மணி சிந்துபாத்தி மயானப் பகுதியில் மூன்றாம் கட்டமாக 111 நாட்கள் அகழ்வாராய்ச்சிப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், நீதிமன்ற முடிவுகளுக்கமைய அடுத்தகட்ட ஆய்வுகளை நடத்த நிதி பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், நிதி ஒதுக்கீடுகளில் அரசாங்கம் ஏன் தயக்கம் காட்டுகிறது எனக் கேள்வி எழுப்பினார்.
உள்நாட்டில் நிதி பற்றாக்குறை இருப்பின், இந்தியா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடம் நிதியுதவியைக் கோர வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறினால், சர்வதேச நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் நேரடியாக முன்வந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி, அங்கு மறைந்துள்ள உண்மைகளைக் கண்டறிய உதவ வேண்டும் என அவையின் ஊடாகக் கோரிக்கை விடுத்தார்.