காணி உரிமைச் சட்டங்கள் மற்றும் அரச காணி முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு.!
காணி உரிமைச் சட்டங்கள் மற்றும் அரச காணி முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு முசலி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை (13) காலை நடைபெற்றது.
மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த செயலமர்வில் முசலி மேற்கு பிரதேச செயலாளர் கலந்து கொண்டார்.
இதன் போது முசலி பிரதேச செயலக பிரிவுகளில் கடமையாற்றுகின்ற கிராம அலுவலர்கள், காணி நிர்வாகத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் காணி விடயங்களுக்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள், லீஸ் முறை மற்றும் அனுமதிப்பத்திர அடிப்படையில் காணி வழங்கல் பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் மற்றும் முசலி பிரதேச செயலகப் பிரிவில் பணியாற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் பிரதான நோக்கம், அரச அதிகாரிகள் காணி தொடர்பான சேவைகளை மக்களுக்கு திறம்படவும் இலகுவாகவும் வழங்குவதற்கான அறிவையும் நடைமுறை அனுபவத்தையும் மேம்படுத்துவதாகும்.
அதேவேளை, அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய காணி சட்டங்கள், புதிய சுற்றறிக்கைகள் (Circulars), அவற்றின் வரைவுகள் மற்றும் நடைமுறைகள் குறித்த தெளிவூட்டல் இந்த செயலமர்வு வழங்கியது.
செயலமர்வின் போது அரச தனியார் காணி என்றால் என்ன?, அரச காணிகளை எவ்வாறு அடையாளம் காண்பது?, அரச காணிகளுக்கான சட்டபூர்வ ஆவணங்கள் எவை?, அரசு அதிகாரிகள் அரச காணிகளை வைத்திருக்க முடியுமா?, காணி உரிமை ஆவணங்கள் மற்றும் காணி உறுதிப்பத்திரங்களை பெறும் நடைமுறைகள், குத்தகை (Lease) அடிப்படையில் காணி பெறுவதற்கான தகுதிகள், காணி அற்றவர்” என்பவர் யார்?, காணி உரிம வகைகள் மற்றும் உரிமை மாற்ற விதிமுறைகள், அரச காணி வழங்கப்படும் போது பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள், குத்தகை முறையில் காணி பெற்றுக்கொள்வது மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதி மற்றும் நிர்வாக செயல்முறைகள் தொடர்பாக விரிவாக விளக்கப்பட்டது.
மேலும், காணி தொடர்பான பல்வேறு சட்ட மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு விரிவான விளக்கங்களும் நடைமுறை வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன. பங்குபற்றுநர்களும் பல கேள்விகளைக் கேட்டு விளக்கங்களைப் பெற்றுக்கொண்டனர்.


