உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் ஆரம்பித்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
74 பார்வைகள்

நாங்கள் தொடர்ந்தும் எங்கே எங்கே எமது உறவுகள் என்ற கேள்வியும், வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் என்ற கோசமும் தொடர்ந்தும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் உள்நாட்டுப் பொறிமுறை மூலமாக எங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்பட்ட விடயம் 17 ஆண்டுகளில் பொய்யாகத்தான் முடிந்திருக்கின்றது. அது இன்னும் நடைபெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. ஆகவே பன்னாட்டுப் பொறிமுறை என்று சொல்லப்படுகின்ற சர்வதேச பொறிமுறையின் ஊடாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்குரிய நீதி கிடைக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்தி சிறிநேசன் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் வார நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17ஆவது ஆண்டை அனுஷ்டிக்கும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர் வை.தினேஸ் உள்ளிட்ட மாநகரசபை உறுப்பினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து நினைவேந்தல் வார நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதன்போது முள்ளிவாய்க்கால் அவலத்தின் நினைவாக வழங்கப்படுகின்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன்,
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக நாங்கள் ஒன்று கூடியிருக்கின்றோம். அதாவது முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்று 17 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. இந்த ஆண்டும் வழக்கம் போல முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், வலிகளை நினைவுகூர்தல், அந்த முள்ளிவாய்க்கால் கஞ்சிக்காக எங்களுடைய மக்கள் ஏங்கி நின்ற அந்த நிலைமை, இவற்றை வெளிக்காட்டக்கூடிய விதத்தில் இன்று மே மாதம் 12 ஆம் திகதியிலிருந்து 18 ஆம் திகதி வரை இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற இருக்கின்றது. இன்று முதல் நாள் நிகழ்வு காந்தி சதுக்கத்தில் மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

வலிகளை வழிகளாக மாற்றுவோம். நாங்கள் சுமந்த வலிகளை விடுதலைக்கான வழிகளாக நாங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் எமது மக்கள் 1956 ஆம் ஆண்டிலிருந்து, சுதந்திரம் பெற்ற 1948 ஆம் ஆண்டுக்குப் பிறகு, 1956 ஆம் ஆண்டு இக்னியாகலை படுகொலை என்று 153 பொதுமக்கள், அதுவும் தொழிலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். அன்று தொடங்கிய இந்த இனப்படுகொலை என்பது 2009 ஆம் ஆண்டு ஐந்தாம் மாதம் 19 ஆம் திகதி அந்த இனப்படுகொலை முடிந்ததாகக் கூறினாலும், இன்றைய நிலையிலும் கூட அந்த நினைவுத் தூபிகளை அழிக்கின்ற செயற்பாடுகள், தமிழர்களின் மனங்களில் இருக்கின்ற அந்த எண்ணங்களை, சிந்தனைகளை, அந்த நினைவேந்தும் செயற்பாடுகளை அழிக்கின்ற செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அந்தவகையில் நாங்கள் தொடர்ந்தும் எங்கே எங்கே எமது உறவுகள் என்ற கேள்வியும், வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் என்ற கோசமும் தொடர்ந்தும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் உள்நாட்டுப் பொறிமுறை மூலமாக எங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்பட்ட விடயம் 17 ஆண்டுகளில் பொய்யாகத்தான் முடிந்திருக்கின்றது. அது இன்னும் நடைபெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. ஆகவே பன்னாட்டுப் பொறிமுறை என்று சொல்லப்படுகின்ற சர்வதேச பொறிமுறையின் ஊடாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்குரிய நீதி கிடைக்க வேண்டும். அந்த மக்கள் உயிர்களையும் இழந்தது மட்டுமல்லாமல் நீதிக்காக 17 ஆண்டுகள் அவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள், அந்த நீதி கிடைக்கவில்லை.

ஆகவே, இந்த புதிய அரசாங்கம், அநுரகுமார திசாநாயக்க தலைமையில் அமைந்திருக்கின்ற இந்த அரசாங்கம் இந்த மக்களுக்குரிய பதிலைக் கொடுக்க வேண்டும். கடந்த காலத்தில் பல அரசாங்கங்கள் இருந்தன. ராஜபக்ஷ அரசாங்கம் இருந்தது, மைத்திரி அரசாங்கம் இருந்தது, கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கம் இருந்தது, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் இருந்தது. இந்த அரசாங்கங்கள் எல்லாம் மொத்தத்தில் ஏமாற்றத்தைத்தான் மக்களுக்கு கொடுத்துச் சென்றிருக்கின்றன. இப்போது பல நம்பிக்கைகளை ஊட்டிய வண்ணம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்றிருக்கின்றது. எனவே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், கொல்லப்பட்ட உறவுகள், கடத்தப்பட்ட உறவுகள், இந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் மிகவும் வலிகளைச் சுமந்த உறவுகள் என்று இருக்கின்றார்கள், இவர்களுக்குரிய நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் நீண்ட காலமாக அவர்கள் குரலைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அதுமட்டுமல்லாமல் இன்றைய நிலையில் இளைஞர்கள் இதனைப் பற்றி சிந்திக்கக்கூடாது என்ற அடிப்படையிலோ தெரியவில்லை, இந்த போதைப்பழக்கவழக்கங்கள், மதுசார பழக்கவழக்கங்கள் இளைஞர்கள் மத்தியில் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அளவுக்கதிகமான இந்த சாராய விற்பனை நிலையங்கள் வடக்கு, கிழக்கில் திறக்கப்பட்டிருக்கின்றன. இது இளைஞர்களின் உணர்வுகளை அழித்து அவர்களை நடைப்பிணங்களாக மாற்றுகின்ற ஒரு செயற்பாடாகக் கூட அமைந்திருக்கலாம். எனவே இளைஞர்கள், யுவதிகள் இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும்.

எங்களுடைய பகுதிகளில் சாராயத் தவறணைகளை நாங்கள் கேட்கவில்லை, மக்களுக்குரிய நீதியைத்தான் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். எனவே உணர்வுகளை அழிக்கக்கூடிய விதத்தில் போதைப்பொருட்களை விற்பனை செய்வதும், அளவுக்கதிகமான முறையில் இந்த சாராயத் தவறணைகளைத் திறப்பதும் என்பது தமிழ் மக்களின் உணர்வுகளை அழித்து அவர்களைக் களியாட்டப் பிரியர்களாக மாற்றுகின்ற ஒரு செயல்பாடாகக் கூட இருக்கலாம். ஆகவே வலிகளைச் சுமந்த நாம் வழிகளைத் தேட வேண்டும். விடுதலைக்கான வழிகளைத் தேடுவதாக இருந்தால் கடந்த காலத்தில் நாங்கள் பட்ட கஷ்டங்கள், அவலங்கள், அநியாயங்களை நாங்கள் மறக்கக்கூடாது. அடுத்து வரும் சந்ததிகளுக்கும் இவற்றைச் சொல்ல வேண்டும். இல்லையென்றால் அவர்கள் இந்தப் போரில் பாதிக்கப்பட்ட எமது இனத்தின் வலிகளை உணராமல் இருந்துவிடுவார்கள். எனவே அதனை கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் இந்த செயற்பாடுகள் தொடர்ந்தும் 17 வருடங்கள் கடந்தும் நடந்து கொண்டிருக்கின்றது என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். எனவே தயவுசெய்து இளைஞர்கள், யுவதிகள் களியாட்டங்களில் அக்கறை கொள்ளாமல் இந்த வலிகளில் பங்கேற்று எங்களுடைய விடுதலைக்காகத் தொடர்ந்தும் சிந்திக்க வேண்டும் என்பதைக் கூறுகின்றேன்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

60 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

69 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

75 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

58 0 0