அமெரிக்கப் பெண்ணையும் குழந்தையையும் தாக்கியதாக இந்திய இளைஞர் கைது!
அமெரிக்காவில் பெண்ணொருவரையும் அவரது மூன்று வயது மகளையும் தாக்கியதாக இந்திய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் சான் அண்டோனியோவில், அமெரிக்கப் பெண் ஒருவரையும் அவரது மகளான மூன்று வயது சிறுமியையும் பூங்கா ஒன்றில் வைத்து தாக்கியதாக அதர்வா வியாஸ் (Atharva Vyas, 24) என்னும் இந்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதர்வா, கேப்ரியல்லா பேரேஸ் (Gabriella Perez) என்னும் அந்தப் பெண்ணின் முடியைப் பிடித்து இழுத்து அவரை கீழே தள்ளியதாகவும், அவரது மகளையும் தாக்கியதாகவும், அந்தச் சிறுமியை அவர் தாக்கியதில் அவளுடைய இரண்டு பற்கள் விழுந்துவிட்டதாகவும், அத்துடன் அந்தச் சிறுமியை அவர் கடித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அதர்வா அந்தப் பெண்ணையும் சிறுமியையும் தாக்குவதைக் கண்ட அக்கம்பக்கத்திலிருந்தவர்கள், அவரைப் பிடித்து பொலிசார் வரும்வரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டுள்ளார்கள். அதர்வா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்க புலம்பெயர்தல் மற்றும் சுங்க அமலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளூர் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள்.
மேலும், கைது செய்யப்படும்போது அதர்வா போதைப்பொருள் ஒன்றை உட்கொண்டிருந்தது தெரியவந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
2023ஆம் ஆண்டு மாணவர் விசாவில் அமெரிக்கா வந்த அதர்வா, டெக்சாஸ் பல்கலையில் ஒருவரை தாக்கிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டதாகவும், 2025ஆம் ஆண்டு அவரது விசா ரத்து செய்யப்பட்டதாகவும், அவர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்பதாகவும் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.