விறுவிறுப்பான வாக்குப்பதிவு..! 40 சதவீதத்தைக் கடந்த மேற்கு வங்கம்.
மேற்கு வங்கத்தில் இன்று முதல் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 152 தொகுதிகளுக்கு நடைபெறும் இத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 41.11% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
மேற்குவங்கத்தில் மொத்தம் 294 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு இன்றும், ஏப்ரல் 29 ஆம் திகதியும் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கின்றன. முதல்கட்டத்தில் 152 தொகுதிகளுக்கு தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதில், மொத்தம் 1,478 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 3.60 கோடி பேர் வாக்குரிமை பெற்று உள்ளனர். மத்திய பாதுகாப்புப் படைகளை சேர்ந்த 2.4 லட்சம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். காலை 11 மணி நிலவரப்படி 41.11% வாக்குகள் பதிவாகி உள்ளன.
ஒரு சில தொகுதிகளில் பதற்றம் நிலவினாலும், பொதுவாக வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயகக் கடமைகளை ஆற்றி வருகிறார்கள். பெர்ஹாம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, லிபிகா நினைவு பெண்கள் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.
பாஜக மூத்த தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி, “நந்திகிராம் மற்றும் பபானிபூர் தொகுதியில் நிலைமை எவ்வாறு உள்ளது என்பது குறித்து நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, சாமானிய மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள். அமைதியைக் குலைக்க முனையும் எவரையும் நாங்கள் விரட்டியடிப்போம்” என தெரிவித்தார்.