இலங்கையில் மலேசிய வர்த்தகர்களின் ‘ஹார்லி டேவிட்சன்’ பயணம்; ஒரு இலட்சம் டொலர் வருவாய்.!
இலங்கையின் சுற்றுலாத்துறையை சர்வதேச ரீதியில் மேம்படுத்தும் நோக்கில், மலேசியாவின் முன்னணி வர்த்தகர்களைக் கொண்ட ‘ShadowFax’ மோட்டார் சைக்கிள் கழகத்தினர் நாடு முழுவதும் மேற்கொண்ட விசேட சுற்றுப்பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
பஸ்வேர்ட் இன்டர்நேஷனல் லங்கா (Password International Lanka) நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயணத்தின் இறுதியில், மலேசிய வர்த்தகக் குழுவினர் நேற்று காலிமுகத்திடல் ஹோட்டலில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார் கமகேவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
‘டத்தோ’ முருகாநந்தம் தலைமையில் வந்த இக்குழுவினர், அமெரிக்க தயாரிப்பான 1500cc முதல் 1900cc எஞ்சின் கொள்ளளவு கொண்ட அதிநவீன ‘ஹார்லி டேவிட்சன்’ மோட்டார் சைக்கிள்களில் ஏப்ரல் 6 ஆம் திகதி முதல் நேற்று வரை நாடு முழுவதும் பயணித்தனர்.
கொழும்பு, யாழ்ப்பாணம், பாசிக்குடா, அறுகம்பே, கண்டி, நுவரெலியா மற்றும் ஹிக்கடுவை உள்ளிட்ட பல முக்கிய சுற்றுலாத் தலங்களை இக்குழுவினர் சுற்றிப் பார்த்தனர்.
இந்தச் சுற்றுப்பயணத்தின் ஊடாக இலங்கைக்கு 100,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான வெளிநாட்டுச் செலாவணி வருமானம் கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தங்குமிடம், எரிபொருள் மற்றும் உள்ளூர் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளும் உள்ளடங்குகின்றன.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுனில் குமார் கமகே, “இவ்வாறான அதிக வருமானம் ஈட்டும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு ஈர்ப்பதன் மூலம் எமது பொருளாதாரத்திற்குப் பாரிய பங்களிப்பு கிடைக்கிறது” என்று பாராட்டினார்.
மலேசியக் குழுவினருக்கு ஆதரவாக இலங்கையின் ‘Bikerholics’ மோட்டார் சைக்கிள் கழகத்தைச் சேர்ந்த 17 உறுப்பினர்களும் இப்பயணத்தில் இணைந்திருந்தனர். எதிர்காலத்தில் அரச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இவ்வாறான பாரிய சர்வதேச மோட்டார் சைக்கிள் பயணங்களை மேலும் பல நாடுகளிலிருந்து ஏற்பாடு செய்ய எதிர்பார்ப்பதாக பஸ்வேர்ட் இன்டர்நேஷனல் லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.












