கோட்டாவின் வழியில் அநுர அரசாங்கம்! : அம்பாறையில் சஜித் கடும் சாடல்
கோட்டாபய ராஜபக்ஷவைப் போலவே அநுரகுமார திஸாநாயக்க அரசும் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்று வாழ்க்கைச் செலவு அதிகரித்து, வாழ்க்கைச் சுமை கூடிக் காணப்படுகின்றது. இந்த ஆண்டில் பணவீக்கம் 9 வீதம் வரை அதிகரிக்கும் என்று மத்திய வங்கி ஆளுநர் கூறுகின்றார். தற்சமயம் வட்டி விகிதம்கூட 9 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. வரவு – செலவுத் திட்டத்தில் ஒரு மாய உலகத்தைக் காட்டி, வட்டி விகிதம் அதிகரிக்கும்போது அந்த மாய உலகின் மீது அணுகுண்டைப் போட்டுள்ளனர்.
கஷ்டப்பட்டு வட்டிக்குப் பணம் வாங்கி விவசாயம் செய்தாலும், தரமான விதை நெல், உரம் மற்றும் எரிபொருள் கிடைப்பதில்லை. உரிய நேரத்தில் உர மானியப் பணம் கிடைப்பதில்லை. கிடைக்கும் பணமும் உரத்திற்குப் போதுமானதாக இல்லை. விவசாய உபகரணங்களின் விலைகளும் மிக அதிகமாக உள்ளது.
யானை – மனித மோதல் உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியில் அறுவடை செய்தாலும், அதற்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் கடன் சுமையில் சிக்கித் தவிக்கின்றனர்; தற்போதைய ஆட்சியில்தான் அதிகளவில் தங்க நகைகள் அடகு வைக்கப்படுகின்றன.
ஒரு கிலோ நெல்லுக்கு ரூ. 150 உத்தரவாத விலையைச் சட்டமாக்குவோம் எனப் பேசியவர்கள், இன்று ரூ. 120 உத்தரவாத விலையையே வழங்கியுள்ளனர். விவசாய அமைச்சரின் கூற்றுப்படி ஒரு கிலோ நெல்லுக்கு ரூ. 137 செலவாகும் நிலையில், ரூ. 120 வழங்குவதன் மூலம் ஒரு கிலோவுக்கு ரூ. 17 நட்டத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரூ. 120 இற்குக் கூட நெல்லை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாய அமைச்சரின் கூற்றுப்படி ஒரு கிலோ சிவப்பு நாட்டரிசிக்கு ரூ. 76, வெள்ளை நாட்டரிசிக்கு ரூ. 86, சம்பாவுக்கு ரூ. 97 மற்றும் கீரி சம்பாவுக்கு ரூ. 109 செலவாகின்றது. ஒரு ஏக்கர் வெள்ளை நாட்டரிசியில் 2 ஆயிரத்து 16 கிலோ உற்பத்தி செய்யப்படும்போது, ரூ. 120 வீதம் ரூ. 2 இலட்சத்து 41 ஆயிரத்து 920 வருமானம் கிடைக்கும் நிலையில், செலவாக ரூ. ஒரு இலட்சத்து 75 ஆயிரத்து 392 கணக்கிடப்படுகின்றது. இதில் நிகர இலாபம் ரூ. 66 ஆயிரத்து 528 ஆக இருக்கும்போது, ஒரு மாத இலாபம் வெறும் ரூ. 11 ஆயிரத்து 98 மட்டுமே.
சர்வதேச நாணய நிதியம் கூறிய மட்டத்தை விடவும் அதிக வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. நாட்டுக்குத் தேசிய விவசாயத் திட்டம் அவசியம். ஆண்டுதோறும் 25 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி தேவைப்படும் நிலையில் 34 இலட்சம் மெட்ரிக் தொன் உற்பத்தி செய்யப்பட்டு 9 இலட்சம் மெட்ரிக் தொன் மேலதிகக் கையிருப்பு உள்ளபோதும், 3 இலட்சத்து 42 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. முன்னர் கமிஷன் அடிப்பதற்காக இறக்குமதி செய்யப்படுவதாகக் கூறியவர்களே இன்று இறக்குமதி செய்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளைப் பேசுவதற்கு இடமளிக்கப்படுவதில்லை. குழந்தைகளுக்குப் போஷாக்கான உணவு, இளைஞர் வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்சாலைகள் குறித்துப் பேசத் தடை விதிக்கப்படுகின்றது.
முன்னர் மாதவிடாய் வறுமை குறித்துப் பேசியபோது ஏளனம் செய்தவர்களே, இன்று பத்து இலட்சம் மாணவிகளுக்கு ஆரோக்கியத் துவாய் சுகாதார வசதிகளை இலவசமாக வழங்கி வருகின்றது. விவசாயிகளைப் பாதுகாக்கும் அரசே நாட்டுக்குத் தேவை.” – என்றார்.














