கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) உளவு அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக ஈரான் ஏப்ரல் 06 ஆம் திகதி தெரிவித்தது.
அதன்படி, இந்த தாக்குதலில் மேஜர் ஜெனரல் சையத் மஜித் காதிமி (Seyed Majid Khademi) வீரமரணம் அடைந்தார் என்று இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் அறிக்கையை மேற்கொள்காட்டி தெஹ்ரானின்
அரசு ஒளிபரப்பு நிறுவனமான ஐ.ஆர்.ஐ.பி. செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலியத் தாக்குதலில் தனது முன்னோடியான ஜெனரல் மொஹமட் காசெமி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, காதெமி 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் IRGC இன் உளவுப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
பெப்ரவரி 28 ஆம் திகதி அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது கூட்டுத் தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து பிராந்திய பதற்றங்கள் அதிகரித்துள்ளன.
இந்தத் தாக்குதலில் அப்போதைய உச்ச தலைவர் அலி கமேனி உட்பட இதுவரை 1,340-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈரான், இஸ்ரேலையும், அமெரிக்க இராணுவ சொத்துக்களைக் கொண்டுள்ள ஜோர்டான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளையும் குறிவைத்து ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி பதிலடி கொடுத்துள்ளது.
இதனால் உயிரிழப்புகளும், உள்கட்டமைப்பு சேதங்களும் ஏற்பட்டதோடு, உலகளாவிய சந்தைகளும் விமானப் போக்குவரத்தும் சீர்குலைந்துள்ளன.