சோலைக்குயில் அவைக்காற்றுக் களத்தின் ஒன்றுகூடல் நிகழ்வு 08.03.2025 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு வலிகாமம் வடக்கு பன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலய கல்யாண மண்டபத்தில் இடம்பெற்றது.
விருந்தினர்களின் மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து புலவர் ம. பார்வதிநாதசிவம் இயற்றிய தமிழ் வாழ்த்து பாடல் சோலைக்குயில் மாணவர்களால் இசைக்கப்பட்டது.
சி. சிவராஜன் அவர்களின் தலைமை உரையினை தொடர்ந்து “வாழ்வின் தெரிவுகள்” பயிற்சி நெறியில் பங்கேற்ற மாணவர்களுக்கான சிறப்புச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இணைகரத்தின் அயற்கோணங்கள் ஒலிவடிவ சிறுகதா நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான சோ. தேவராஜா அவர்களின் நூல் வெளியீட்டுரையினை தொடர்ந்து கோகிலா மகேந்திரன் எழுதிய “இணைகரத்தின் அயற்கோணங்கள்” சிறுகதை நூலினை சோ. தேவராஜா அவர்கள் வெளியிட சிறப்பு பிரதிகளை சிவலிங்கம் ராஜினிதேவி தம்பதியினர், விரிவுரையாளர் இ. இராஜேஷ்கண்ணன், வைத்தியர் செ. பஞ்சகல்யாணி, ந. கவிதா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து இணைகரத்தின் அயற்கோணங்கள் சிறுகதை விமர்சன அரங்கு இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து சர்வதேச பெண்கள் தினமான அன்று விழிசைச் சிவம் நல்ல பெண்மணிகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. மருத்துவ நிபுணர் பேராசிரியை கீதாஞ்சலி சத்தியதாஸ், எழுத்தாளர் புனிதவதி சண்முகலிங்கம், ஆசிரியர் ராஜி கெங்காதரன் ஆகியோருக்கான விருதுகளை சிரேஷ்ட சட்டத்தரணி சோ. தேவராஜா மற்றும் தெல்லிப்பளை உதவிப் பிரதேச செயலர் நேசரத்தினம் செல்வகுமாரி ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.
தொடர்ந்து சோலைக்குயில் அவைக்காற்றுக் கள உறுப்பினர்களின் கல்வியில் சாதித்துவரும் மாணவர்களுக்கான சாதனைச் சிறுவர் பரிசு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
அளவெட்டி அருணோதயாக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபரான கி. மகேந்திரராஜா அவர்களின் 75 ஆவது அகவை நிறைவை முன்னிட்டு, அன்றைய பாடசாலைக் காலத்தில் அவரின் மகத்தான சேவைகளை நினைவுகூர்ந்து அளவெட்டி அருணோதயாக் கல்லூரியின் தற்போதைய அதிபர் த. தயானந்தன் அவர்களின் வாழ்த்துரையும், அதனைத் தொடர்ந்து கௌரவிப்பும் இடம்பெற்றது.
தெல்லிப்பளை உதவிப் பிரதேச செயலர் நேசரத்தினம் செல்வகுமாரி அவர்களின் சிறப்பு விருந்தினர் உரையினைத் தொடர்ந்து எங்கட புத்தகங்கள் நிறுவன இயக்குனரான குலசிங்கம் வசீகரன் அவர்களின் கருத்துரை இடம்பெற்றது.
தொடர்ந்து சோலைக்குயில் மாணவர்களின் ஆற்றுகையில் கோகிலா மகேந்திரனின் எழுத்திலும், நெறியாள்கையிலும் உருவான “ஒரு சோகம் இறுகும் போது” சிறுகதை நாடக நிகழ்வு இடம்பெற்றது.
இறுதியாக சோலைக்குயில் அவைக்காற்றுக்கள நிறுவனரான கோகிலா மகேந்திரனின் ஏற்புரையினையும் நன்றியுரையினையும் தொடர்ந்து சோலைக்குயில் அவைக்காற்றுக்கள கீதத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன.

