2788 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த இரண்டு போதைப்பொருள் வர்த்தகர்கள் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரி ஏ. ரஹீம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தில் ஆர். டி.எஸ் வீதியில் வைத்து 30 மற்றும் 35 வயதுடைய இரு போதை வியாபாரிகளும் நேற்று மாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 வயதுடைய நபரிடமிருந்து 1228 மில்லி கிராம் மற்றும் 35 வயது உடைய நபரிடமிருந்து 1560 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பிரதேசத்தை சுற்றிவளைத்த காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் குறித்த நபர்கள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
