”யாழப்பாணம் கலாசார நிலையத்தின் பெயர் மாற்றத்திற்கான பொறுப்பு இந்தியத் தூதரகத்தின் அலுவலகத்தின் மீதே விழுகிறது. இந்தத் திடீர் மாற்றத்திற்கான விளக்கத்தைக் கௌரவத்துக்கு உரியவர் அளிக்க வேண்டும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.”
- இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.
‘திருவள்ளுவர் கலாசர மையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு வருத்தம்’ என்ற தலைப்பில் இந்த விடயத்தையொட்டி சிறு குறிப்பு ஒன்றை அவர் இன்று ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பவை வருமாறு:-
“யாழ். குடாநாட்டு மக்கள் வழியாக இலங்கைக்கு இந்தியா வழங்கிய கொடை யாழ் கலாசார நிலையம்.
இது, இதுவரை ‘யாழ்ப்பாணம் கலாசார நிலையம்’ என்றே அழைக்கப்பட்டது. ‘திருவள்ளுவர் கலாசார மையம்’ என்று பெயர் மாற்ற உங்களைத் தூண்டியது எது?
தமிழ் மொழிக்கு ஏன் தாழ்வு நிலை? பதினாறாவது திருத்தத்தின் கீழ் தமிழ் மொழி (வடக்கு, கிழக்கில்) முதன்மையானதாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தகைய (பெயர்) மாற்றத்தை அரசாங்கம் செய்திருந்தால் அவர்கள் இதை (தமிழ் முன்னிலைப்படுத்தப்பட்டதை) அறிந்திருப்பார்கள். அமைச்சர் சந்திரசேகற் (பெயர்ப் பதாகை) திறக்கப்படுவதற்கு முன் இந்த மாற்றம் பற்றி தெரியாது என்று மறுத்துள்ளார். எனவே, மாற்றத்திற்கான பொறுப்பு தூதரகத்தின் அலுவலகத்தின் மீதே விழுகின்றது.
இந்தத் திடீர் மாற்றத்திற்கு கௌரவத்துக்குரிய நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.” – என்றுள்ளது.