“வவுனியா மாநகரசபை உட்பட வன்னியின் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கான சாதக நிலைமை உள்ளதாக” தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமையானது பல்வேறு பிரச்சனைக்குட்பட்டதாக இருக்கிறது. நாம் ஏனைய கட்சிகளுடன், சுயேட்சை உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளோம். தனிப்பட்ட ரீதியாகவும் உறுப்பினர்களுடன் பேசியுள்ளோம்.
வவுனியாவில் சிங்கள பிரதேச சபை, வவுனியா மாநகர சபை, தெற்கு தமிழ் பிரதேச சபை மற்றும் மன்னாரில் முசலி, நானாட்டான் ஆகிய சபைகளில் நாம் ஆட்சியமைப்பதற்கான சாதகமான நிலைமைகள் காணப்படுகின்றது.
எமது கொள்கைகளை ஏற்று செயற்படுபவர்களிடம் திறந்த மனதுடன் அழைப்பு விடுக்கின்றோம். எமது கொள்கைகள், சிந்தனைகள் கட்சியின் விழுமியங்களுக்கு ஏற்ற வகையில் ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கினால் நிச்சயமாக அவர்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்க நாங்கள் காத்திருக்கின்றோம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது உள்ளூராட்சி மன்றங்களூடாக பல்வேறுபட்ட செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராக இருக்கின்றது.
எமது வெற்றிக்கு ஊடகவியலாளர்களும் உதவியுள்ளனர். அதற்கு எமது நன்றிகளை கூறிக்கொள்கின்றோம். நியாயமான ஊடகவியலாளர்கள் இங்கு உள்ளனர். அவர்களது சேவைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்.
ஆனால் ஒரு சில ஊடகவியலாளர்கள் இலாப நோக்குடன் மக்களை குழப்பும் விதமான பல்வேறு செய்திகளை பரப்புகின்றனர். அவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கியே நாம் நாடாளுமன்றில் குரல் எழுப்பி வருகின்றோம். இன, மத, மொழி பேதத்திற்கு எமது அரசில் இடமில்லை. வவுனியாவில் மூன்று இன மக்களும் இருக்கின்றனர். அவர்களிடம் பல்வேறு கோரிக்கைகள் இருக்கின்றன. அவை தொடர்பான தீர்வைப் பெறுவதற்கு நாடாளுமன்றுக்கு அதனை தெரியப்படுத்துகின்றோம். அவற்றையும் ஊடகங்களில் பிரசுரித்து உங்கள் நடுநிலைத்தன்மையை பேணுமாறு அன்பாக கோரிக்கை விடுக்கின்றேன்” என்றார்.




