ஆனையிறவு உப்பளத்தில் கடந்த 13.05.2025 ஆம் திகதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டமானது இன்றைய தினம் (27) உப்பு உற்பத்தி நிறுவனத்தின் முகாமையாளர் எம் .ஜே. பி. துவான் மன்சில் மற்றும் உப்பு உற்பத்தி கூட்டத்தாபனத்தின் இயக்குனர் சபையைச் சேர்ந்த தி . நந்தனன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பருவ கால பணியாளர்களை நேரடியாக அழைத்து பல மணி நேரம் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, “தொழிலாளர்கள் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளான பாதுகாப்பு உடைகள், மருத்துவ வசதிகள், பணி புரியும் நேரத்தில் நோய்தாக்கம் ஏற்படுமாயின் மருத்துவ சான்றுபெற்றிருப்பின் அவர்களுக்கான முழுமையான ஊதியம், தொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட 10 கோரிக்கைகள் போன்றன நிறைவேற்றப்படும் எனவும் அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்றான ஒரு முகாமையாளரை மாற்றுவதாயின் முகாமையாளர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எதுவும் ஆதாரம் அற்றவை. இதில் எந்தவித உண்மைத் தன்மை தன்மையும் இல்லை. தனிப்பட்ட ஒரு சிலரது விருப்பு, வெறுப்புகளுக்காக முகாமையாளரை மாற்ற முடியாது. முகாமையாளரை மாற்றுவது தவிர்ந்த ஏனைய விடயங்கள் அனைத்திலும் கவனம் செலுத்தப்பட்டு அவர்களுக்குரிய தீர்வு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறப்பட்டது.
இதற்கு அமைவாக எதிர்வரும் நாட்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர். அத்துடன் மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது ஆனையிறவு உப்பளத்தின் உப்பின் பெயர் “ரஜ லுனு” என்ற பெயரை மாற்றி இனிவரும் காலங்களில் “ஆனையிரவு உப்பு” என்ற பெயரில் உப்பை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்து வருவதாகவும், மிக விரைவில் ஆனையிரவு உட்பலத்தின் உப்பை அனைவரும் பெற்றுக் கொள்ளக் கூடியவாறு அமையும்” எனத் தெரிவித்தார்.