வறுமை மாணவர்களின் கல்விக்கு ஒருபோதும் தடையாக அமைந்துவிடக்கூடாது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் தேவையுடைய 217 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் சா.சுதர்சன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (16.01.2025) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார்.
அவர் தனது உரையில், கல்வி வாழ்க்கைக்கு முக்கியமானது. கல்வியில்லாதவர்கள் இரண்டு கண்களும் இல்லாதமைக்கு சமனானவர்கள். நான் யாழ். மாவட்டச் செயலராக இருந்த காலத்தில் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் என்னை சந்திக்க வந்திருக்கின்றார்கள். பிள்ளைகள் கற்பதற்கு ஆர்வமாக இருந்தபோதும் அவர்களுக்கு சீருடைகள், கற்றல் உபகரணங்கள் இல்லாமல் இருக்கின்றனர்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் கல்வியைக் கைவிடக்கூடாது.
வறுமையிலிருப்பவர்களுக்கு உதவுவதற்கு எமக்கு எந்தவொரு சுற்றறிக்கைகளும் தடையாக இருக்கப்போவதில்லை. நாம் சரியானதை சரியாகச் செய்தால் எதற்கும் பயப்படதேவையில்லை. யாழ்ப்பாண பிரதேச செயலர் சுதர்சன், ஏனைய பிரதேச செயலர்களிலிருந்து வித்தியாசமானவர். இன்று உங்களுக்கான கற்றல் உபகரணங்களை அவர் பெற்றுத் தந்திருக்கின்றார். வறுமையைப்போக்க அவர் எடுக்கும் நடவடிக்கைகள் சிறப்பானவை.
கல்வியில் சிறந்த நிலைக்கு நீங்கள் வருவதே, இன்று நீங்கள் பெற்றுக்கொள்ளும் உதவிக்கு பிரதியுபகாரமாக அமையும். அவ்வாறு உயர்ந்த நிலைக்கு வந்து ஏனையவர்களுக்கு உதவி செய்யவேண்டும். கடினமாக உழைத்தால் எதையும் செய்ய முடியும். உங்களால் முடியும் என்று நினைத்து எதையும் செய்யுங்கள். நீங்கள் வெற்றியடைந்தவர்களாக மாறலாம், என்றார் ஆளுநர்.