நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று (29) மாலை முதல் மழையுடன் கூடிய வானிலை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடமத்திய மாகாணத்திலும் அத்துடன் மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
சிலாபம் தொடக்கம் புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். இக் கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோமீற்றராக அடிக்கடி அதிகரித்தும் காணப்படும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். சிலாபம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான அத்துடன் காங்கேசன்துறை தொடக்கம் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
மன்னார் தொடக்கம் புத்தளம்,கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.5 – 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெளக்கூடும். இக் கடல் பிராந்தியங்களை அண்மித்த தரைப் பிரதேசத்திற்கு கடல் நீர் உட்புகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.