நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸுக்காக துடிப்படுத்தாடிவரும் இலங்கை அணி தினேஷ் சந்திமாலின் சதத்தின் உதவியுடன் இன்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்களை குவித்தது.
ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெற்றுவரும் இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்படுத்தாடும் சந்தர்ப்பத்தை பெற்றுக் கொண்டது. பெத்தும் நிசங்க இந்த போட்டியிலும் ஏமாற்றம் அளித்து ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்தார்.
எனினும் சந்திமால் மற்றும் திமுத் ஜோடி 122 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்ட நிலையில் திமுத் கருணாரத்ன 46 ஓட்டங்களுடன் துரதிஷ்டவசமாக ரன்அவுட்டாகி ஆட்டம் இழந்தார். எனினும் அபாரமாக ஆடிய தினேஷ் சந்திமால் தனது 16வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்து 114 ஓட்டங்களை பெற்று ஆட்டம் இழந்தார்.
இன்றைய நாள் முடிவில் அஞ்சலோ மெத்யூஸ் மிகச் சிறப்பாக துடிப்படுத்ததாடி 78 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்காதுள்ளதுடன், கமிந்து மெண்டிஸ் அரைச்சதம் கடந்து, 132 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் அறிமுக டெஸ்டிலிருந்து அனைத்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக அதிக அரைச்சதம் விளாசிய வீரராக உலக சாதனை படைத்து 51 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளார்.