மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு.!
மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பருத்தித்துறையில் நேற்று வியாழக்கிழமை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
பருத்தித்துறை சூரியமஹால் மண்டபத்தில் நேற்றுக் காலை 10.00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வு, பிற்பகல் 1.00 மணி வரை இடம்பெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த கி. பிரகலாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வடமராட்சிப் பிரதேசத்தில் உள்ள மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் அழைக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர்.
பருத்தித்துறை பிரதான வீதி, முதலாம் கட்டைச் சந்தியில் (சித்தப்பா பூங்கா முன்பாக) இருந்து, தவச்செல்வி, நிவேதிகா ஆகிய இரு மாவீரர்களின் தாயாரான தவராசா திருமங்கலம் மாவீரர் பொதுத் திருவுருவப் படத்துக்குச் சுடரேற்றியமையைத் தொடர்ந்து, மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மங்கல வாத்திய மரியாதையுடன் ஊர்வலமாக நிகழ்விடத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
அன்புக்குமரன், தங்கமணி ஆகிய இரு மாவீரர்களின் பெற்றோரான வல்லிபுரம் செல்வராணி தம்பதியர் மாவீரர் நினைவுப் பொதுச்சுடரை ஏற்றி வைத்தமையைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.
கப்டன் பண்டிதரின் தாயாரான திருமதி மகேஸ்வரி மாவீரர் நினைவுக் கல்லறைக்கு மாலை அணிவித்து மலர் தூவி வணக்கம் செலுத்தியமையைத் தொடர்ந்து, ஏனையவர்களும் மலர் தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மாவீரர்களின் நினைவாக அவர்களது உறவுகளினால் ஈகைச்சுடர்கள் ஏற்றிவைக்கப்பட்டன.
வல்வெட்டித்துறை பதில் நகரபிதா ந.பத்மநாதன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணிகளான காண்டீபன், சுகாஸ் ஆகியோர் மாவீரர் நினைவுரைகளை ஆற்றினர். தொடர்ந்து மதிய உணவு வழங்கப்பட்டதுடன், பயன்தரு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், வடமராட்சிப் பிரதேசத்துக்குட்பட்ட மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர், பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல், உப நகரபிதா தே. தேவராஜேந்திரன், வல்வெட்டித்துறை பதில் நகரபிதா ந. பத்மநாதன், நகர சபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசிய ஆர்வலர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.











