வடகிழக்கு பருவமழை தொடர்பாக ஆராயும் முன்னாயத்த கலந்துரையாடல்.!
மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை முன்கூட்டியே எதிர்கொள்வதற்கும், அவற்றினால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கும் தேவையான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை (13) மன்னார் மாவட்ட செயலகத்தின் மருதம் மாநாட்டு மண்டபத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலாளர், மன்னார் மாவட்டத்தின் திணைக்களத் தலைவர்கள், முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தி.ரி.என். சூரியராஜா அவர்கள், எதிர்வரும் வடகிழக்கு பருவமழை மற்றும் சூப்பர் எல்நினோ (Super El Niño) தாக்கம் தொடர்பாகவும், அதனால் ஏற்படக்கூடிய அனர்த்த அபாயங்கள் மற்றும் முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.
அத்துடன், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் அவர்கள் மத்தி தேக்கம் மற்றும் மாவட்டத்தில் உள்ள குளங்களின் தற்போதைய நிலைமை, நீர்மட்ட நிலவரங்கள் மற்றும் பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான சமர்ப்பணமொன்றை வழங்கினார்.
மேலும், எதிர்வரும் பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ள அனர்த்தங்கள், பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகள், குளங்களின் நீர்மட்டக் கண்காணிப்பு, மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுதல், அவசரகால பதிலிறுப்பு நடவடிக்கைகள் மற்றும் திணைக்களங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இறுதியாக, எதிர்வரும் பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களை திறம்பட எதிர்கொண்டு, பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதற்காக அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.







