ஓடும் பேருந்தில் ஏற முயன்ற பயணி சக்கரத்தில் சிக்கி விபத்து!
நுவரெலியா, வலப்பனை பஸ் நிலையத்தில் ஓடிக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் ஏற முயன்ற பயணி ஒருவர் முன்சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
நேற்று (13) காலை சுமார் 9.45 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், வலப்பனை ரூபஹா பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே காயமடைந்துள்ளார்.
ராகலையிலிருந்து வலப்பனை ஊடாக கொழும்பு நோக்கிப் பயணிக்கும் பஸ், வலப்பனை பஸ் நிலையத்துக்குள் நுழைந்துகொண்டிருந்தபோது, பஸ் முழுமையாக நிறுத்தப்படுவதற்கு முன்னர் அதில் ஏறுவதற்கு குறித்த பயணி முயன்றுள்ளார்.
இதன்போது அவர் தவறி விழுந்ததில், அவரது வலது கால் பஸ்ஸின் முன்சக்கரத்தில் சிக்கியுள்ளது.
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் கொழும்பு செல்வதற்காக பஸ் நிலையத்துக்கு வந்திருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர் முதலில் வலப்பனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இ.போ.ச பஸ்ஸின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற விதம் அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.





