உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
12 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

திசைகாட்டி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டத்திலாவது மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
81 பார்வைகள்

இளைஞர், யுவதிகள் பல அப்பாவித்தனமான எதிர்பார்ப்புகளுடன் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த போதிலும், கடந்த இரண்டு வருடங்களில் அவை நிறைவேற்றப்படவில்லை எனவும், இம்முறை வரவு செலவுத் திட்டத்திலாவது தமது எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் இளைஞர்கள் காத்திருப்பதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் தெரிவித்தார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்று (2026.11.12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“மேயர் ரஞ்சன் ஜயலால் பகிரங்கமாக ஊடகங்களில் வெளியிடுவது இந்த அரசாங்கத்தின் கருத்தையே ஆகும். தங்களுக்கு இலஞ்சம் கொடுக்குமாறு மறைமுகமாகக் கூறுவதையே அவர் பகிரங்க தலைப்பாக மாற்றியுள்ளார்.

பொறுப்புவாய்ந்த ஒரு மேயர் வெளியிட்டுள்ள இந்தக் கருத்துக்கு அரசாங்கம் பொறுப்பேற்குமா என்ற பாரிய சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.

அத்துடன், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உடனடியாக ரஞ்சன் ஜயலால் அவர்களைக் கைது செய்ய வேண்டும். இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு எடுக்கும் நடவடிக்கை என்ன என்பதை நாம் மிகுந்த அவதானத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மேலும், இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள திசைகாட்டி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டத்தின் மீது மக்கள் பாரிய எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர்.

இன்று மக்கள் பெரும் அழுத்தங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதால், அந்த எதிர்பார்ப்புகளைச் சிதைக்காமல் ஜனாதிபதி அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

நேற்று முன்தினம் ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 04 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தப் பேருந்துகள் 30 வருடங்களுக்கும் மேலான மிகவும் பழுதடைந்த இ.போ.ச (SLTB) பேருந்துகளாகும். இந்த விபத்தில் சாரதிகள் வீதி விதிகளை மீறியமை தொடர்பான பிரச்சினை ஒருபுறம் இருந்தாலும், அந்தப் பேருந்துகள் வீதிகளில் ஓடுவதற்குத் தகுதியானவையா என்ற கேள்வியும் எழுகிறது.

பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதாகக் கூறியே தற்போதைய தரப்பினர் ஆட்சிக்கு வந்தனர். அதற்கான வேலைத்திட்டம் இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளதா என்பதை நாம் அவதானித்து வருகிறோம்.

அதேபோல், கடந்த 2026 வரவு செலவுத் திட்டத்தில் நிர்மாணத் துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 30 வீதம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதுடன், எஞ்சிய அனைத்து நிதியும் திறைசேரிக்குத் திரும்பியுள்ளது.

இதுவொரு மிகவும் தோல்வியடைந்த அரசாங்கமாகும். இன்று நிர்மாணத் துறையில் 70 வீதமான பணிகள் நடைபெறவில்லை. தார் இல்லையென்றால் அதற்கான மாற்று வழிகளை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், மாற்று வழிகளை உருவாக்காமல் ஒதுக்கப்பட்ட நிதி திறைசேரிக்குத் திரும்பியுள்ளது.

மேலும், கிராமப்புற இளைஞர், யுவதிகள் இந்த வருடமாவது 12 இலட்சம் ரூபாவிற்கு ‘விட்ஸ்’ (Vitz) காரொன்றை வாங்கிப் பயணிப்பதற்குக் காத்திருக்கிறார்கள். எனவே, இந்த வரவு செலவுத் திட்டத்திலாவது 12 இலட்சம் ரூபாவிற்கு விட்ஸ் காரை வாங்குவதற்கான வாய்ப்பை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் என நாம் நினைக்கிறோம்.

பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு எதற்கு ஒரு அரசாங்கம் என ஜனாதிபதி அன்று கேள்வி எழுப்பினார். ஆனால் இன்று மக்கள் பிச்சை எடுக்காத குறையாகத் தவிக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் அரசாங்கமாக இது மாறியுள்ளது.

இன்று பாண் துண்டுக்கும் வரி விதிக்கும் அரசாங்கமே உள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி மக்களுக்குச் சகல வரிச் சலுகைகளையும் வழங்குவார் என நாம் நம்புகிறோம்.

மேலும், இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பானிலிருந்து தரமான உந்துருளிகளை இறக்குமதி செய்து தருவதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். எனவே, இளைஞர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவதற்கு இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி வழிவகுப்பார் என்ற பாரிய எதிர்பார்ப்பு உள்ளது.

ஒரு உந்துருளியை வாங்குவதற்கும், நல்லதொரு தொழிலைப் பெறுவதற்குமான அப்பாவித்தனமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ளவே இளைஞர்கள் இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தனர். ஆனால் இன்று பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லை; அவர்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.

பெலவத்தையிலிருந்து வழிநடத்தப்படும் ஒரு அரசாங்கமே இன்று உள்ளது. அது நடக்கக் கூடாது. இடதுசாரிகள் எனக் கூறிக்கொண்டு இன்று வலதுசாரி வேலைத்திட்டங்களை முன்னிலைப்படுத்திச் செயற்படும் அரசாங்கமாக இது மாறியுள்ளது.

எனவே, ஒரு இடதுசாரித் தலைவர் என்ற வகையில், ஜனாதிபதி இந்த வரவு செலவுத் திட்டத்தை மக்களுக்குப் பாரிய சலுகைகளை வழங்கும் வரவு செலவுத் திட்டமாக மாற்றுவார் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட சமூகத்தின் நலன், விவசாய அபிவிருத்திக்காக பாரிய நிதி ஒதுக்கீடு.!

சுதந்திர இலங்கையின் 81ஆவது வரவு – செலவுத் திட்டமாக 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான கௌரவ அநுரகுமார திசாநாயக்க அவர்களினால்…

69 0 0
இலங்கை செய்திகள்

தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்ற பெண் கைது.!

சட்டவிரோதமாக இரண்டு கோடியே நாற்பத்தைந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்து, அவற்றைக் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முற்பட்ட…

77 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் இயந்திர “பரசூட்” முறையிலான நாற்று நடுகை ஆரம்பம்.!

வடமாகாணத்தில் விவசாயிகள் மத்தியில் நவீன விவசாய நடவடிக்கைகளை உட்புகுத்தி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு செயற்றிட்டங்களை வடமாகாண விவசாய அமைச்சு மேற்கொண்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சியில் இயந்திர…

73 0 0
இலங்கை செய்திகள்

யாழில் சாரதிகளிடம் போதைப்பொருள் சோதனை; இருவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வாகன சாரதிகள் போதைப்பொருள் பாவித்தார்களா என்பது தொடர்பிலான சோதனை நடவடிக்கையின் போது கார் ஒன்றில் குடும்பத்தினருடன் வந்த சாரதி உள்ளிட்ட இரு சாரதிகள் போதைப்பொருள் பாவித்தமை…

90 0 0