பெருந்தோட்டத் துறையில் மனிதவள மேம்பாட்டை முன்னிலைப்படுத்திய சான்றிதழ்கள் வழங்கும் மற்றும் கௌரவிப்பு விழா!
நாட்டின் பெருந்தோட்டத் துறையின் எதிர்காலப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சர்வதேச சந்தையில் வெற்றிகரமாகப் போட்டியிடக்கூடிய நிலையான தொழில்துறையாக அதனை மாற்றியமைக்கவும் அறிவு, நவீன தொழில்நுட்பம் மற்றும் மனிதவள மேம்பாடு ஆகியவை அவசியமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய இலக்குகளை எட்டும் நோக்கில், தேசிய பயிர்த்தொழில் மேலாண்மை நிறுவனத்தின் (NIPM) ஏற்பாட்டில் பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் (Waters Edge) ஹோட்டலில் மாபெரும் சான்றிதழ் வழங்கும் மற்றும் கௌரவிப்பு விழா இன்றைய தினம் (10.11.2026) இடம்பெற்றது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் கௌரவ சமந்த வித்யாரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் கௌரவ சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்ததுடன், துறைசார் மேம்பாட்டுப் பணிகளில் அவரது ஈடுபாடும் வழிகாட்டல்களும் விசேடமாகக் கவனிக்கப்பட்டன.
மேலும், இந்நிகழ்வில் சிரேஷ்ட பேராசிரியர் ரங்கிக ஹல்வத்துர உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்களும் பெருந்திரளான துறைசார் நிபுணர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில், பெருந்தோட்டத் துறையில் மனிதவள மேம்பாடு மற்றும் தொழில்சார் திறன்களை உயர்த்திடும் இலக்குடன், தேசிய பயிர்த்தொழில் மேலாண்மை நிறுவனத்தால் நடாத்தப்பட்ட கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சிப் படிப்புகளை வெற்றிகரமாக நிறைவு செய்த 501 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
அதுமட்டுமின்றி, பெருந்தோட்டத் துறையின் உன்னதத்துக்காகவும் நீண்டகால வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்த மூத்த நிபுணர்களைப் பெருமைப்படுத்தும் முகமாக, தொழில்சார் கௌரவ உறுப்புரிமைகளும் தொழில்சார் அதிசாமானிய உறுப்புரிமைகளும் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டன.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் சமந்த வித்யாரத்ன அவர்கள், பெருந்தோட்டத் துறைசார் மக்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத்தரம் குறித்துக் குறிப்பிடுகையில், “பெருந்தோட்டத் துறைக்குத் தொடர்புடைய மக்களைப் பலப்படுத்துவது என்பது அவர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கு மாத்திரம் உரித்தானதல்ல.
அவர்களின் வீடுகள், கல்வி, சுகாதார வசதிகள் மற்றும் சமூக நிலை உள்ளிட்ட ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்துவது அதற்கு அவசியமாகும்” எனத் தெரிவித்தார்.
இத்துடன், காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் பெருந்தோட்டத் துறையை மீள்திறன் கொண்ட தொழில்துறையாக மாற்ற வேண்டியது அவசியமெனவும், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற நவீன தொழில்நுட்பங்களை உடனடியாக அறிமுகப்படுத்துவதன் மூலமே சர்வதேச சந்தையில் வெற்றிகரமாகப் போட்டியிட இயலும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், அரசாங்கம் நிர்ணயித்த 2030 ஆம் ஆண்டுக்கான தேசிய இலக்குகளான தேயிலை, தென்னை மற்றும் ரப்பர் உற்பதிகளை அதிகரித்தல் போன்ற இலக்குகளை எட்டும் பொருட்டு புதிய வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், அரச நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து ஒரு குழுவாகச் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.










