நயினாதீவு மகா வித்தியாலயத்தின் 80 ஆவது ஆண்டு நிறைவு; விசேட நினைவு அஞ்சல் முத்திரை வெளியீடு.!
நயினாதீவு மகா வித்தியாலயத்தின் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நினைவு அஞ்சல் முத்திரை வெளியீட்டு விழா நேற்று(09) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
1946 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யா/நயினாதீவு மகா வித்தியாலயம், தனது எட்டு தசாப்தகால கல்விப் பயணத்தை இவ் ஆண்டு நிறைவு செய்கின்றது.
இதனைக் கொண்டாடும் வகையிலும், பாடசாலையின் வரலாற்றுச் சிறப்பையும் கல்விப் பணியையும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு எடுத்தியம்பும் வகையிலேயே இந்த விசேட நினைவு அஞ்சல் முத்திரை வெளியிடப்பட்டது.
பாடசாலை அதிபர் தி. நிதர்சனன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் திருமதி கே. நிவேதிகா, முத்திரைப் பணியகத்தின் பணிப்பாளர் லங்கா டி சில்வா, முத்திரைப் பணியகத்தின் சிரேஷ்ட வெளியீட்டு உத்தியோகத்தர் சி.என். முனசிங்க மற்றும் பாடசாலையின் பழைய மாணவரும் கலாநிதியுமான லயன் சரவணபவன் கவிகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
இதன்போது, பாடசாலையின் 80 ஆண்டுகால வரலாற்றை அடையாளப்படுத்தும் நினைவு அஞ்சல் முத்திரை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.
அத்துடன், பாடசாலையில் கற்று முன்னர் தபாலதிபர்களாகப் பணியாற்றியவர்கள், மற்றும் தற்போது பணியாற்றி வருகின்ற தபால் துறை சார்ந்த உத்தியோகத்தர்களுக்கும் விசேட நினைவு முத்திரைகள் வழங்கப்பட்டன.
நயினாதீவு மண்ணின் கல்வி வளர்ச்சியில் முக்கிய இடம்பிடித்துள்ள இப்பாடசாலை, பல தலைமுறைகளாக மாணவர்களுக்குக் கல்வியூட்டி சமூகத்தின் பல்வேறு துறைகளிலும் தடம்பதிக்கும் ஆளுமைகளை உருவாக்கியுள்ளது.
அந்த வகையில், 80 ஆண்டுகால கல்விப் பயணத்தை நினைவுகூரும் இந்நினைவு முத்திரை வெளியீடு, பாடசாலையின் வரலாற்றில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதுடன், நயினாதீவு மக்களின் கல்விப் பாரம்பரியத்தையும் பெருமையையும் தேசிய அளவில் அடையாளப்படுத்தும் நிகழ்வாக இந்த நிகழ்வு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





