பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக அநுரவின் ‘பட்ஜட்’ அமைய வேண்டும்.!
இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கிச் செல்லும் இத்தகைய சூழ்நிலையில், எதிர்வரும் 12 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்படும் வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வேலைத்திட்டம் ஒன்று முன்வைக்கப்படும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையின் பொருளாதாரம் அபிவிருத்தியடைவதை விட சுருங்கிக்கொண்டு செல்கின்றது. 2025 ஆம் ஆண்டின் 2 ஆம் காலாண்டில் இருந்த 5.8 வீத வளர்ச்சி, 2026 ஆம் ஆண்டின் 2 ஆம் காலாண்டாகும்போது 4.2 வீதமாகக் குறைந்துள்ளதுடன், 2008 ஆம் ஆண்டில் இருந்த பொருளாதார அளவை விட இன்று 2 வீதம் குறைந்துள்ளதையும் காட்டுகின்றது.
மாதந்தோறும் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக மக்களின் சேமிக்கும் திறனும் பணத்தின் மதிப்பும் வீழ்ச்சியடைந்து வருகின்றது. ஜூன் மாதத்தில் 6.3 வீதமாக இருந்த பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 8 வீதமாகவும், உணவுப் பணவீக்கம் 8.5 வீதமாகவும் உயர்ந்துள்ளது. பணவீக்கத்தின் தீவிரத்தன்மை காரணமாக, 9 ஆண்டுகள் செல்லும்போது மக்களின் சொத்துக்களில் 50 வீதம் குறையக்கூடும்.
தற்போதைய அரசு பதவியேற்றபோது 2024 ஒக்டோபரில் 293 ரூபாவாக இருந்த ஒரு டொலரின் மதிப்பு இன்று 337 ரூபாவாக உயர்ந்துள்ளதுடன், இது சுமார் 45 ரூபாவின் வீழ்ச்சியாகும். இதனால் எரிபொருள், பருப்பு, வெங்காயம், சீனி, மா போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் போது ஒவ்வொரு டொலருக்கும் கூடுதலாக 45 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. அத்துடன், நாட்டின் வெளிநாட்டுக் கடனைக் கணக்கிடுவதிலும் இந்த அதிகரிப்பு கடுமையாகப் பாதிக்கின்றது.
பொருளாதாரத்தின் சுருக்க நிலை, பணவீக்கம் மற்றும் அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவது தடைப்பட்டுள்ளதுடன் இருக்கும் வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பதும் கடினமாகியுள்ளது. படித்த இளம் தலைமுறையினர் மத்தியில் வேலையின்மை 43 வீதமாக உயர்ந்துள்ளது.
இது ஆசியாவிலேயே மிகக் கூடிய இளையோர் வேலையின்மை விகிதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் 10 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் 50 இலட்சம் பேர் உள்ளனர். வேலையற்ற பட்டதாரிகளில் 50 வீதம் பேர் நாட்டை விட்டு வெளியேற விரும்பினாலும், மேற்கு நாடுகளின் குடியேற்றக் கட்டுப்பாடுகள் காரணமாக அதுவும் தற்போது முடங்கிப் போயுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டுக்குப் பெரியளவிலான வெளிநாட்டு முதலீடுகள் எவையும் வரவில்லை. அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்புக் குறைவு, அடிக்கடி மாறக்கூடிய தெளிவற்ற கொள்கைகள் மற்றும் சாதகமற்ற வரிக்கொள்கைகள் காரணமாக இலங்கை முதலீடுகளுக்கு சாதகமற்ற சூழல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் இந்த ஆண்டின் நடுப்பகுதி வரை 16.7 வீதம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. செப்டெம்பர் மாத நிலவரப்படி 28 வீதம் அதாவது கால் பகுதி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
அதேபோல், ‘டித்வா’ பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபாய் நிதியில் இதுவரை 8 வீதம் போன்ற சிறிய சதவீதமே செலவிடப்பட்டுள்ளது. இதற்குப் பிரதான காரணம் நிதிப் பற்றாக்குறையை விட, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் செயலற்ற தன்மையும் பலவீனமுமாகும்.
கிராம மட்டத்திலான 100 சிறிய திட்டங்களை அடையாளம் கண்டு மக்களின் சாதாரண வாழ்க்கைக்கு நேரடியாகப் பாதிப்புச் செலுத்தும் துறைகளுக்கு நிதியை ஒதுக்கீடு செய்வதற்குப் பதிலாக, அரசு நெடுஞ்சாலை மேம்பாட்டிற்காக 3 ஆண்டுகளில் 2 டிரில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளது. டைல்ஸ், வாகனங்கள், சீமெந்து போன்றவற்றுக்காக அதிக டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதுடன், இதனால் பொதுமக்களுக்கு எந்தவிதமான நிவாரணமும் கிடைக்கவில்லை. இதன் பலன்கள் சில பெருநிறுவனங்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன.
உலக வங்கியின் அறிக்கைகளின்படி இலங்கையில் கடுமையான வறுமை 30 வீதமாக உயர்ந்துள்ளதுடன், உலக உணவுத் திட்டத்தின்படி நாட்டின் 6 மில்லியன் மக்கள் தொகையினர் ஒரு வேளை சத்தான உணவைக் கூட பெற முடியாத நிலை தற்போது உருவாகியுள்ளது. 18 வீத வற் வரி போன்ற மறைமுக வரிகள் காரணமாக ஏழை, பணக்காரன் என்ற பாரபட்சமின்றி அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2020 ஆம் ஆண்டு முதல் 2025 ஜனவரி வரை வாகன இறக்குமதி முழுமையாகத் தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் 2025 ஆம் ஆண்டில் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் சுனாமி போல் மீண்டும் அது திறக்கப்பட்டது. உலகின் அதிஉயர் சொகுசு வாகனங்களான பிரித்தானிய மகாராணி பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் ரக வாகனங்கள் கூட எந்தத் தடையும் இன்றி நாட்டிற்குள் கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டது.
அரசு இதன் மூலம் பெரும் வரி வருமானத்தை எதிர்பார்த்தாலும், எதிர்பார்க்கப்பட்ட வாகனப் பதிவு இடம்பெறாததால் அரசுக்குக் கடுமையான இழப்பு ஏற்பட்டது. அதுமட்டுமின்றி நம்மிடமிருந்த பெருமளவிலான வெளிநாட்டுச் செலாவணி வெளிநாடுகளுக்குச் சென்றது. இதனால் நாட்டின் கையிருப்பில் இருந்த பெருமளவிலான அந்நியச் செலாவணியை நாம் இழந்தோம்.
2025 ஆம் ஆண்டில் இந்த வாகன இறக்குமதி மூலம் சுங்கத்துக்குக் கிடைத்த வருமானம் 2 ஆயிரத்து 551 பில்லியன்களாகும். ஆனால் 2026 செப்டெம்பராகும்போது அது 2 ஆயிரம் வரை குறைகின்றது. வரும் ஆண்டில் அதைவிடவும் குறையும். ஏனெனில் புதிய வாகனப் பதிவுகள் 15 வீதம் குறைந்துள்ளது.
எவ்வாறாயினும், நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கிச் செல்லும் இத்தகைய சூழ்நிலையில், எதிர்வரும் 12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக உணரக்கூடிய இந்த நடைமுறைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வேலைத்திட்டம் ஒன்று முன்வைக்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.” – என்றார்.


