வரிகளை நீக்கக் கோரி கொழும்பில் போராட்டப் பேரணி
“அநியாய வரிகளை நீக்கு…! வாழ்க்கைச் சுமையைக் குறைத்திடு!!” என்ற கோரிக்கைகளை முன்வைத்து, மக்கள் போராட்ட இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டப் பேரணி இன்று (3) சனிக்கிழமை கொழும்பில் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு, பொரளை கெம்பல் மைதான வளாகத்தில் இருந்து நண்பகல் ஆரம்பமான பேரணி, கோட்டை பகுதியை நோக்கி நகர்ந்தது.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் வரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், முன்னணி சோசலிசக் கட்சி, மக்கள் போராட்ட முன்னணி, சுதந்திரத்துக்கான பெண்கள் இயக்கம், தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் உள்ளிட்ட பல வெகுஜன அமைப்புகள் மற்றும் சிவில் சமூகக் கூட்டமைப்புகள் பங்கேற்றிருந்தன.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வரிச்சுமையைக் குறைக்க வேண்டும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பியவாறு பேரணியில் சென்றனர்.


