மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் ஜனன தின நிகழ்வு
உலகிற்கு அகிம்சை வழியைப் போதித்த மகாத்மா காந்தியின் ஜனன தின நிகழ்வு இன்று (02.10.2026) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவுத் தூபியில் நடைபெற்றது.
மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி அ. செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
மேலும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான கி. துரைராஜசிங்கம், காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் க. பாரதிதாசன், மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவர் உ. உதயகாந்த், வர்த்தக சங்க செயலாளர், சென் ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டு காந்தியடிகளாரின் நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.
இதன்போது, இலங்கை காந்தி சேவா சங்கத்தினால் வெளியிடப்படும் “காந்தியம்” சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது. சிறப்பு மலரின் பிரதம ஆசிரியர் எம். ஷாந்தன் சத்தியகீர்த்தி அவர்களினால் வெளியிடப்பட்ட முதலாவது பிரதியானது பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
மகாத்மா காந்தியின் அகிம்சை, சமாதானம் மற்றும் மனிதநேயக் கொள்கைகளை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

